driving licence new rules : தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை அச்சிட்டு வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 15 முதல் இந்த புதிய நடைமுறை மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
சட்டப்பேரவை விதி 110ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொதுமக்கள் அலைச்சலின்றி சேவைகளைப் பெறும் வகையில் இந்த டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் அசல் ஆவணங்களை எடுத்துச் செல்லாமல், டிஜிட்டல் நகல்களை இணையவழியில் எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இணையதளங்கள்: ஓட்டுநர் உரிமங்களை SARATHI போர்ட்டல் மூலமாகவும், வாகனப் பதிவுச் சான்றிதழ்களை VAHAN போர்ட்டல் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
செயலிகள்: மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட DigiLocker மற்றும் mParivahan ஆகிய மொபைல் செயலிகள் மூலமும் இவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வழிகாட்டுதல்: பொதுமக்கள் இவற்றை எளிய முறையில் பதிவிறக்கம் செய்ய போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் (TNSTA Official - @tnstaofficial) வழிகாட்டுதல் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பயன்பாட்டில் சிரமம் உள்ள பொதுமக்களுக்கு உதவ, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (RTO) சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிமுறைகள் அடங்கிய விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
SARATHI போர்ட்டல் மூலம் டிஜிட்டல் DL பதிவிறக்கம் செய்தல், VAHAN போர்ட்டல் மூலம் டிஜிட்டல் RC பதிவிறக்கம் செய்தல், DL மற்றும் RC ஆவணங்களில் செல்போன் எண்ணைப் புதுப்பித்தல், விண்ணப்ப எண்ணைக் கண்டறிதல், DigiLocker மற்றும் mParivahan செயலிகளைப் பயன்படுத்தி ஆவணங்களைப் பெறுதல்,
டிஜிட்டல் ஆவணங்களுக்குப் பதிலாக கையில் அச்சிடப்பட்ட நகல் தேவைப்படும் பொதுமக்கள், அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் வண்ணப் பிரதியாகப் பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் SMS தகவலைக் காட்டி இதைப் பெறலாம். ஒரு ஆவண நகலுக்கு ரூ.60 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஓட்டுநர் உரிம உரிமையாளர்களும், வாகன உரிமையாளர்களும் தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை DL மற்றும் RC ஆவணங்களுடன் பரிவாகன் (Parivahan) தளம் மூலம் உடனடியாக இணைக்க வேண்டும். இணையவழியில் இணைக்கத் தெரியாதவர்கள், RTO அலுவலகங்களில் இதற்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தங்களது மொபைல் எண்ணைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.