கால்நடை வளர்ப்போருக்கு சூப்பர் செய்தி: மானியத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government Subsidy Schemes : பசுந்தீவன உற்பத்தி மானியம் மற்றும் 50% மானியத்தில் புல் வெட்டும் கருவி வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பால் உற்பத்தியைப் பெருக்கவும் 2026–27 ஆம் ஆண்டிற்கான இரு முக்கிய மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் 50% அரசு மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரப் புல் வெட்டும் கருவி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1. பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குதல் திட்டம்
கால்நடைகளுக்குத் தரமான பசுந்தீவனம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 210 ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 0.25 ஏக்கர் (25 சென்ட்) கொண்ட ஒரு யூனிட்டிற்கு ரூ.1,750/- வீதம் மானியத் தொகை வழங்கப்படுகிறது.
தகுதி நிபந்தனைகள்:
- குறைந்தபட்சம் 2 கால்நடைகளை வளர்த்து வருபவராகவும், உறுதியான நீர்ப்பாசன வசதியுடன் நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.
- 25 சென்ட்டிற்கு குறையாத நிலப்பரப்பில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி செய்து, அந்தத் தீவனப் பயிரைக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பராமரிக்கத் தயாராக இருத்தல் அவசியம்.
- 3 ஆண்டு காலத்திற்குச் செல்லுபடியாகும் முறையான குத்தகை ஒப்பந்தம் மற்றும் பாசன வசதியுடன் நிலம் வைத்துள்ள விவசாயிகளும் இதற்குப் பரிசீலிக்கப்படுவர்.
- அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை வளர்த்து, பயிரைப் பராமரிக்க உறுதியான நீர் ஆதாரம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக 1 ஏக்கர் என்ற வரம்பிற்கு உட்பட்டு 25 சென்ட் மதிப்புள்ள பல அலகுகள் (units) அனுமதிக்கப்படும்.
- நடுத்தர பால்வளத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, அவர்கள் பராமரிக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப அதிகபட்சமாக 2.5 ஏக்கர் பரப்பளவு வரை தளர்வு அளிக்கப்படும்.
- நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் சிறு மற்றும் குறு கால்நடை வளர்ப்போர், ஆவின் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தொடர்ந்து பால் வழங்கும் உறுப்பினர்கள், மற்றும் துறைசார் பால்வள மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன், விதிமுறைகளின்படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பயனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
2. 50% மானியத்தில் மின்சார இயந்திரப் புல் வெட்டும் கருவி திட்டம்
கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவன விரயத்தைத் தடுத்து, பண்ணைப் பராமரிப்பு வேலைகளை எளிதாக்கும் நோக்கில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரப் புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2026–27 ஆம் ஆண்டில் 50% அரசு மானியத்தில் 25 செயற்கூறியீட்டிற்கு (units) இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பயனாளிகளுக்கான தகுதி நிபந்தனைகள்:
- விண்ணப்பதாரர் சிறு அல்லது குறு கால்நடை வளர்ப்பு விவசாயியாக இருக்க வேண்டும்.
- பயனாளி சொந்தமாக குறைந்தபட்சம் 2 பெரிய கால்நடைகளை வைத்திருக்க வேண்டும்.
- தீவனப் பயிர் சாகுபடிக்கு உகந்த வகையில் குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
- இயந்திரத்தை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் போதுமான மின்சார வசதி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பயனாளி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு அரசுத் திட்டத்தின் கீழும் மின்சாரப் புல் வெட்டும் இயந்திரத்திற்கான மானிய உதவியைப் பெற்றிருக்கக் கூடாது.
- அரசின் இறுதி மானிய முறைக்கு உட்பட்டு, மொத்த உபகரணச் செலவில் 50% சொந்தப் பங்களிப்புத் தொகையினை வழங்க பயனாளி முன்வர வேண்டும்.
இத்திட்டத்திலும் கால்நடை வளர்ப்பு விவசாயம் மேற்கொள்ளும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் அரசின் விதிமுறைகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த இரு நலத்திட்டங்களின் கீழும் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், உடனடியாகத் தங்கள் கிராமத்திற்கு உட்பட்ட அரசு கால்நடை மருந்தகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்குள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்