Thanjavur News: தஞ்சாவூரில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, அது இயற்கையான மரணம் என்று நாடகமாடிய ஒருவரைப் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். அந்த நபர் வெளியிட்ட விவரங்கள் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே உள்ள ஏலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜன் (25). இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த மகாதேவி (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுடையது காதல் திருமணம்.

செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் மகாதேவி எழுந்திருக்காததால், ராமராஜனின் தாயார் அவரைச் சென்று பார்த்தார். மகாதேவியை எழுப்ப முயற்சித்தும், அவர் எந்தப் பதிலும் அளிக்காததால், அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகாதேவியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலநலக் குறைவால் அவர் இறந்துவிட்டதாக ராமராஜன் குடும்பத்தினர் கூறிய நிலையில், மகாதேவியின் குடும்பம் அதை நம்பவில்லை. மகாதேவியின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மகாதேவியின் உறவினர்கள் அவர் தலையில் காயமிருப்பதைக்கண்டனர். சந்தேகம் காரணமாக அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மகாதேவியின் தலையில் காயங்கள் இருந்ததால், அவரது தாய் திருநீலக்குடி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் எனப் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருநீலக்குடி போலீசார் 'இயல்புக்கு மாறான மரணம்' (unnatural death) என வழக்குப்பதிவு செய்தனர். பரிசோதனையில் மகாதேவிக்கு தலையில் பலத்த காயம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் விசாரணையில், திங்கள்கிழமை கணவன் மனைவிக்கு இடையில் தீவிர வாக்குவாதம் நடைபெற்றதாக தெரியவந்தது. இரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் அவரை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியதாக மகாதேவியின் கணவன் ராமராஜன் ஒப்புக்கொண்டார். இதில் மகாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதை இயற்கை மரணம் போல் காட்ட, ராமராஜன் மகாதேவியின் உயிரற்ற உடலை பாயில் படுக்க வைத்தார். அதன் பின் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து இயற்கையாக நடந்த மரணம் போல் நாடகம் ஆடியுள்ளார்.
காவல்துறை விசாரணையில் ராமராஜன் இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார். மகாதேவியைக் கொலை செய்த கணவர் ராமராஜன், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தாயார் வெண்ணிலா மற்றும் அண்ணன் முத்துராமன் (26) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணமான ஓராண்டிலேயே இளம்பெண்ணை அவரது கணவன் அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.