கள்ளக்குறிச்சி மக்களுக்கு குட்நியூஸ்! தரம் உயரும் அரசு மருத்துவமனை
Kallakurichi Latest News : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
Kallakurichi Latest News : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட மற்றும் நகராட்சி மருத்துவமனைகளை அரசு தரம் உயர்த்தி வருகிறது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகம் அமைப்பதற்காக ரூ.23.75 கோடி மதிப்பீட்டிற்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதற்கட்ட கட்டுமான மற்றும் மின் பணிகளுக்காக ரூ.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முறைப்படி அரசாணை பிறப்பித்துள்ளது.
சட்டப்பேரவை அறிவிப்பும் திட்டப் பின்னணியும்
சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மொத்தம் ரூ.66.93 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்" என அறிவித்திருந்தார். அதன்படி, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்பு இயக்கம் (PM-ABHIM) திட்டத்தின் கீழ் இந்த அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 100 படுக்கைகள் கொண்ட பிரிவு ரூ.43.18 கோடி மதிப்பிலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் கொண்ட பிரிவு ரூ.23.75 கோடி மதிப்பிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு, தற்போது கள்ளக்குறிச்சிக்கான பணிகள் நேரடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. மதுரைக்கான விரிவான திட்ட அறிக்கை தனித்தனியாக சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்கள்
கள்ளக்குறிச்சி தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையான ரூ.23.75 கோடியானது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற நிதிப் பங்கீட்டு விகிதத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கான செலவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
கட்டுமானம் மற்றும் மின் பணிகள்: ரூ.20.00 கோடி. அதில் கட்டிட வேலைகள் ரூ.12.02 கோடி, மின் பணிகள் ரூ.3.12 கோடி, 18% ஜிஎஸ்டி ரூ.2.72 கோடி மற்றும் மருத்துவமனை தளவாடங்கள்/வசதிகள் ரூ.2.11 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வாங்க ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் பணிகள் அமலாக்கம்
கட்டிட மற்றும் மின்சாரக் கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளவும், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை தளவாடங்களை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாகத் தருவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, மூன்றாம் தரப்பு கண்காணிப்புடன் கட்டுமானப் பணிகளைத் தரமாக நிறைவேற்ற பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் போது, அவசர விபத்து மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பொதுமக்களுக்கு நவீன, உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் உடனடியாகக் கிடைக்க வழிவகை ஏற்படும்.