SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரிக்கு தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்காத விவகாரத்தில், அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என ஆவண சரிபார்ப்பில் தெரியவந்ததாக பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

Written By R Balaji
Published: Oct 04, 2026, 06:39 PM IST | Updated: Oct 04, 2026, 06:45 PM IST
Join

காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு குழந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படவில்லைஎன்ற புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்விகள் எழுந்த நிலையில், பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

காரைக்குடி கழனிவாசல் புதுரோடு பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் தனது கணவர் சுரேஷ் குமாருடன் வசித்து வருகிறார். இது அவருக்கு இரண்டாவது பிரசவம் என கூறப்படுகிறது. பிரசவத்திற்காக அவர் தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண் குழந்தை பிறந்தது

கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமா மகேஸ்வரிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் குழந்தையின் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டையில் தங்க மோதிரம் வழங்குவதற்கான தேதி அக்டோபர் 1, 2026 என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட தேதியில் மருத்துவமனைக்கு சென்று மோதிரத்தைப் பெற உமா மகேஸ்வரி காத்திருந்ததாக தெரிகிறது.

ஆதார் முகவரியால் ஏற்பட்ட சிக்கல்?

ஆனால், குழந்தைக்கான தங்க மோதிரத்தை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாக உமா மகேஸ்வரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரிக்கு பதிலாக கர்நாடகா மாநில முகவரி இடம்பெற்றிருப்பதே இதற்குக் காரணம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னரும் தங்க மோதிரம் கிடைக்காததால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவர் வசிக்கும் இடத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ வசிப்பது இயல்பான ஒன்று. அதேநேரத்தில், பிரசவத்திற்காக அவர்கள் தங்களது தாய் வீட்டிற்கு வருவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், உமா மகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு வந்து பிரசவம் பார்த்த நிலையில், ஆவணத்தில் இடம்பெற்றுள்ள முகவரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திட்டப் பயனை மறுப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைக்கு ஏற்கனவே திட்டத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் தங்க மோதிரம் வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக பொது சுகாதார இயக்குநரகம் அளித்துள்ள விளக்கத்தில், திருமதி உமா மகேஸ்வரி, ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

பிரசவத்திற்காக தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த அவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 17.09.2026 அன்று அறுவைச் சிகிச்சை (Cesarean Section) மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும்  கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திலும்  (Potnatal care) போதுமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது.

29.09.2026 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து  விடுவிக்கப்பட்டபோது (discharge),  “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்” கீழ் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்

தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் சுமார் 4.11 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.755 கோடி வரை செலவிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரைக்குடியில் ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்தில், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் பயனாளியின் ஆவணங்கள் அடிப்படையில் பொது சுகாதார இயக்குநரகம் அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES