தமிழகத்தின் மாநில உரிமைகள் மற்றும் சுயாட்சி தொடர்பான கோரிக்கைகள் 5 தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றை கொண்டவை. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகார பகிர்வு சமமாக இருக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை முன்னெடுக்கும் வகையில், முந்தைய திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சூரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்து, அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த குழு பரிந்துரைகளை வழங்கியது.
ஆனால், இந்த குழு தனது பணிகளை முழுமையாக முடித்து இரண்டாவது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பே, தற்போதுள்ள தவெக அரசு அதை கலைத்துள்ளது. அதற்கு பதிலாக தமிழக மாநில சட்ட ஆணையம் மத்திய - மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்யும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு தமிழகத்தின் நீண்ட கால மாநில சுயாட்சி கோரிக்கையின் எதிர்காலம் குறித்தும், தவெகவின் அரசியல் கொள்கை நிலைப்பாடு குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
குறிப்பாக, பாஜகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்ததுடன், மாநில சுயாட்சியை ஆதரிப்பதாகவும் தெரிவித்த தவெக, தற்போது குரியன் ஜோசப் குழுவை கலைத்திருப்பது ஏன்? மத்திய பாஜக அரசுடன் மோதலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதா? மாநில சட்ட ஆணையத்தால் இந்த குழுவின் பணிகளை முழுமையாக தொடர முடியுமா? இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தின் மாநில சுயாட்சிக்கான கோரிக்கை திராவிட இயக்கத்தின் அரசியல் கொள்கைகளில் இருந்து உருவானது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சி.என். அண்ணாதுரை முதலமைச்சரானார். அவருக்கு பிறகு 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.
மாநில அரசுகள் மக்களுக்கு மிக நெருக்கமாக செயல்படுவதால், அவர்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு அதிக அதிகாரங்கள் அவசியம் என்று கருணாநிதி வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார பகிர்வை ஆய்வு செய்வதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். மாநில அரசு ஒன்று இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு குழுவை அமைத்தது அதுவே முதல் முறையாகும்.
சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து ராஜமன்னார் குழு ஆய்வு செய்தது. இதில், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய நான்கு முக்கிய துறைகளை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை கருணாநிதி முன்மொழிந்தார். மாநில சுயாட்சி என்பது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற விமர்சனங்கள் எழுந்தபோது, அதிகாரங்களை சமமாக பகிர்ந்தளிப்பது நாட்டை பிளவுபடுத்தாது. மாறாக, அதன் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று கருணாநிதி வாதிட்டார்.
இதற்குப் பிறகு, மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1983ஆம் ஆண்டு சர்க்காரியா ஆணையமும், 2007ஆம் ஆண்டு பூஞ்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. இருப்பினும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதாக எழும் விவாதங்களும், மாநிலங்களின் உரிமைகள் தொடர்பான முரண்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன.
குறிப்பாக, ஜிஎஸ்டி வருவாய் பகிர்வு, நீட் போன்ற மத்திய அரசின் பொதுத் தேர்வுகள், ஆளுநர்களின் அதிகாரங்கள், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம் போன்ற விவகாரங்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல்களை அதிகரித்துள்ளன. தமிழகத்துடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த பின்னணியில், மத்திய - மாநில உறவுகள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் விதம் குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய உயர்நிலை குழுவை அமைத்தார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் தமிழக மாநில திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தது. மேலும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கையும் நடத்தியது. இதில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டன.
10 அத்தியாயங்களை கொண்ட தனது முதல் அறிக்கையை இந்தக் குழு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசியலமைப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு மாற்றங்களை அந்த அறிக்கை முன்மொழிந்தது.
அரசியலமைப்புத் திருத்தங்கள்: பெரும்பாலான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். நாட்டின் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களும், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மாநிலங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மாநில எல்லைகள் மாற்றம்: ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றுவது அல்லது அந்த மாநிலத்தை பிரிப்பது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
ஆளுநரின் அதிகாரம்: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
மொழி உரிமைகள்: இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை பாதுகாக்க அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டும். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மேலும் மொழிகளை சேர்க்க வேண்டும் என்றும், ஒரே மொழியை திணிக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறை: 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை பகிர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை 2126ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும். அல்லது மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிட்ட அளவுக்கு ஒரே நிலையை அடையும் வரை நீட்டிக்க வேண்டும்.
தேர்தல் மற்றும் கல்வி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மாநில தேர்தல் ஆணையங்களை வலுப்படுத்த வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மாநில அரசின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.
நிதி மற்றும் சுகாதாரத் துறை: ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் அதன் கட்டமைப்பை மாற்ற வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் விஜய் தலைமையிலான தவெக அரசு குரியன் ஜோசப் குழுவை கலைத்துள்ளது. இந்த முடிவுக்கு மாநில சுயாட்சியை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நிர்வாகக் காரணங்களின் அடிப்படையிலேயே குழு கலைக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய - மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட தமிழக மாநில சட்ட ஆணையமே இனி ஆய்வு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் நிபுணர்களுடன் ஏற்கெனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், குழுவின் உறுப்பினரான மு. நாகநாதன் மே 4ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் மாநில சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டது. மத்திய - மாநில உறவுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆய்வு செய்வதும் அதன் பணிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கெனத் தனியாக ஒரு குழு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவையும், பொதுவான பணிகளை கொண்ட மாநில சட்ட ஆணையத்தையும் ஒரே மாதிரியாக கருத முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் முதல் அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளுக்கு இனி அதே முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதும் விவாதமாகியுள்ளது.
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மாநில சுயாட்சி என்பது அக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில், ஒவ்வொரு மாநில மக்களுக்கும் மாநில சுயாட்சி என்பது அடிப்படை உரிமை என்று தவெக அறிவித்தது. மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் உறுதியளித்தது.
இந்நிலையில், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக அறிவித்த கட்சியே ஆட்சிக்கு வந்த பிறகு, அதற்காக அமைக்கப்பட்ட முக்கியமான குழுவை கலைத்திருப்பது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் தவெக, மாநில சுயாட்சி விவகாரத்தில் தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த முடிவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தின் மாநில உரிமைகளுக்கான குரலை இந்த முடிவு பலவீனப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நீதிபதி குரியன் ஜோசப், கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மு. நாகநாதன் ஆகியோரின் பணிகளைப் பாராட்டிய அவர், இந்தக் குழுவின் பணிகளை மற்றொரு குழுவால் அப்படியே மாற்றீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
"குழுவின் பணிகள் முழுமையடைவதற்கு முன்பே அதைக் கலைத்ததற்காக தவெக அரசு என்றென்றும் அவமானத்தைச் சுமக்கும்" என்றும் ஸ்டாலின் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
திமுக சட்ட அணியின் இணைச் செயலாளர் பரந்தாமனும் தமிழக அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையின் தலையீட்டின் காரணமாகவே தவெக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள தவெக அரசை மத்தியில் ஆளும் பாஜக கட்டுப்படுத்துகிறது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடம் தவெக ஆலோசனை கேட்கிறது. இந்த குழுவை கலைத்த முடிவும் அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்த விஜய்யின் கட்சி, தற்போது அந்த கட்சியை விமர்சிப்பதற்குக்கூடத் தயங்குகிறது. பாஜகவின் பெயரை குறிப்பிடுவதற்கே அச்சப்படுவது போல தெரிகிறது. குரியன் ஜோசப் குழுவை கலைத்தது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை" என்று அவர் குற்றம்சாட்டினார்.
தவெக அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரி கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறுகையில், "குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டவை. இத்தகைய முக்கியமான குழுவைக் கலைத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
முந்தைய திமுக அரசு அமைத்தது என்பதற்காகவே இந்தக் குழுவை தற்போதைய அரசு கலைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் தங்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி கடுமையாக உழைத்து முதல் அறிக்கையை தயாரித்துள்ளனர். பணிகள் முழுமையடைவதற்கு முன்பே குழுவை கலைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், மாநில சட்ட ஆணையம் இந்தக் குழுவின் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளும், மாநிலங்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய அரசு அமைத்தது என்பதற்காக மட்டுமே மாநிலத்தின் நலன் சார்ந்த ஓர் அமைப்பை கலைப்பது நியாயமற்றது என்றும், தனது முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில சுயாட்சி என்பது தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் முக்கியமான கோரிக்கையாகும். ராஜமன்னார் குழுவில் தொடங்கி, சர்க்காரியா மற்றும் பூஞ்சி ஆணையங்கள் வழியாகத் தொடர்ந்த இந்த விவாதத்தில், குரியன் ஜோசப் குழுவின் அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றது.
முதல் அறிக்கையில் கல்வி, மொழி, நிதி, ஆளுநரின் அதிகாரம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் மாற்றங்களை பரிந்துரைத்திருந்த நிலையில், இரண்டாவது அறிக்கை வெளியாவதற்கு முன்பே குழு கலைக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் மாநில சட்ட ஆணையம் இந்தப் பணிகளைத் தொடரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஒருபுறம், நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. மறுபுறம், மாநில சுயாட்சிக்கான தனது கொள்கை நிலைப்பாட்டிலிருந்து தவெக பின்வாங்கிவிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எனவே, குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த விவகாரம் என்பது ஒரு குழுவின் செயல்பாட்டை நிறுத்தியதோடு முடிந்துவிடும் விஷயமல்ல. தமிழகத்தின் மாநில உரிமைகள், மத்திய - மாநில அதிகாரப் பகிர்வு மற்றும் தவெக அரசின் அரசியல் கொள்கை நிலைப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியமான விவகாரமாக மாறியுள்ளது.