SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா? நகல் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?

Ration card New Update: ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், நகல் ரேஷன் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 07, 2026, 10:08 AM IST | Updated: Aug 07, 2026, 10:12 AM IST
Join

Ration card New Update: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிய ரேஷன் கார்டுகளை, உரிய நபர்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்று நேரடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்த பிறகு, வட்டவழங்கல்துறையின் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு புதிய கார்டுக்கு ஒப்புதல் கொடுக்கப்படும். இந்த தகவல் விண்ணப்பதாரரின் செல்போனுக்கே தெரியப்படுத்தப்படும். புதிய ரேஷன் கார்டு ஒப்புதல் கொடுக்கப்பட்டு, பிரின்ட் ஆகி வந்த பிறகு வட்ட வழங்கல் துறையில் இருந்து உரிய நபருக்கு கார்டு வந்தது செல்போன் அழைப்பு மூலம் தெரியப்படுத்தப்படும். அதன்பிறகு உரிய நபர் நேரடியாக சென்று புதிய ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்! E-Kyc அப்டேட் செய்ய சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு


அதுவே, நகல் மின்னணு குடும்ப அட்டையாக இருந்தால் விண்ணப்பிப்பவர்களின் முகவரிக்கே அஞ்சல்துறை மூலம் அனுப்பி வைக்கப்படும். அதாவது, ரேஷன் கார்டு தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ ஆன்லைனில் நகல் மின்னணு அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி செலுத்தினால், நகல் மின்னணு அட்டை, பயனாளியின் வீடுகளுக்கே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துவிடும்.

அஞ்சல் வழியில் வரும் நகல் மின்னணு குடும்ப அட்டைகள்

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல்துறை கொடுத்திருக்கும் விளக்கத்தில், தொலைந்து போன, சேதமடைந்த அல்லது மேம்படுத்தப்பட்ட குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக நகல் மின்னணு அட்டைகளைப் பெறுவதற்கு, www.tnpds.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வசதிகள் உள்ளன. நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பும் திட்டம் 05.04.2023 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், அட்டைக்கான மற்றும் அஞ்சல் வழியில் அனுப்புவதற்கான கட்டணமாக ரூ.50/- அட்டைதாரரிடமிருந்து மின்னணுப் பரிவர்த்தனை முறையில் பெறப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! புதிய விண்ணப்பம், பெயர் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர், அட்டைதாரர்கள் நகல் குடும்ப அட்டையைப் பெற, முதலில் தொடர்புடைய உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு கொடுத்து, பின்னர் அட்டை தயாரானதும் மீண்டும் நேரில் சென்று பெற்று வந்தனர். அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், பயனாளிகளின் இருப்பிடத்திற்கே நகல் குடும்ப அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 05.04.2023 முதல் 31.03.2025 வரை, 9,44,452 நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை

01.04.2017 முதல் பொது விநியோகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, ஆதார் எண் பதிவு மற்றும் கைபேசி எண் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக, துரிதக் குறியீடு (QR code) உடன் கூடிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேலும், "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" என்ற திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். மே 2021 முதல் மார்ச் 2025 வரை, 18,46,013 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயனாளியின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்திற்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஆதார் எண் எடுக்க இயலாத 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண் உள்ளீடின்றி பயனாளிகளாகச் சேர்க்கப்படுகின்றனர்.

மின்னணு குடும்ப அட்டைகளின் வகைகள்:

தமிழ்நாட்டில் தற்போது ஐந்து வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அவை:

முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (PHH)

முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (அந்தியோதயா அன்னயோஜனா) (PHH-AAY)

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH)

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (சர்க்கரை) (NPHH-S)

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் - எப்பொருளும் வேண்டாதவை (NPHH-NC)

முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (அந்தியோதயா அன்னயோஜனா) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் ஆகியவை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வழங்கப்படுகின்றன. இதர குடும்ப அட்டைகள் பயனாளிகளின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | Ration Card : நகல் ரேஷன் கார்டுக்கு ஆன்லைன், ஆப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES