டாஸ்மாக் கடை அருகே பார் அமைப்பதில் முக்கிய மாற்றம்! புதிய விதிகள் வெளியீடு
TASMAC Bar Rules: டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) அமைப்பது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான 2003-ஆம் ஆண்டு விதிகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழக அரசு அதிகாரப்பூர்வ சிறப்பு அரசிதழை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
பார் அமைக்கும் இடம் மற்றும் தூரக் கட்டுப்பாடுகள்
புதிய விதிகளின்படி, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடையை ஒட்டிய வளாகத்திலோ அல்லது கடையிலிருந்து அதிகபட்சமாக 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ மட்டுமே மதுபானக் கூடங்களை அமைக்க அனுமதி வழங்கப்படும். அதேவேளையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 50 மீட்டருக்குள்ளும், இதர ஊரகப் பகுதிகளில் 100 மீட்டருக்குள்ளும் பார் அமைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நகர் ஊரமைப்பு அல்லது வளர்ச்சி முகமைகளால் 'வணிகப் பகுதி' அல்லது 'தொழில்துறை பகுதி' என வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த தூரக் கட்டுப்பாடு விதி பொருந்தாது என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஹோட்டல் வளாகத்திற்குள்ளும் டாஸ்மாக் பார்களை அமைக்க அனுமதி கிடையாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பழங்குடியினர் பகுதிகளில் முழு தடை
ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பகுதிகள், குறிப்பாக வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் எவ்வித மதுபானக் கூடங்களையும் (பார்) திறக்கவோ அமைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறைப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள்
பொது இடங்களிலோ அல்லது சில்லறை மதுபான விற்பனைக் கடைகளிலிருந்தோ பார்க்கும்போது பாருக்குள் மது அருந்துவது வெளியில் தெரியாதவாறு தடுப்புத் திரைகள் மற்றும் மறைப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட வேண்டும். மேலும், பார்கள் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைத்தளப் பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும்.
பாருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் வசதி மற்றும் கைகழுவும் பேசின் வசதிகள் கட்டாயம் செய்து தரப்பட வேண்டும். அத்துடன் பார் வளாகம் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு முழு தடை
புதிய விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாத நபர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது அவர்களை பாருக்குள் அனுமதிக்கவோ கூடாது. அதேபோல், 21 வயது நிரம்பாத நபர்களை மதுபானக் கடைகளிலோ அல்லது பார்களிலோ பணியமர்த்துவதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயது குறித்த சந்தேகம் எழும் பட்சத்தில், அரசு அல்லது கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட உரிய ஆவணச் சான்றுகளைக் கேட்டுப் பெற நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பார் செயல்படும் நேரம் மற்றும் எச்சரிக்கைப் பலகை
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பாருக்குள் யாரையும் அனுமதிக்கவோ, மது அருந்தவோ அனுமதி கிடையாது.
ஒவ்வொரு மதுபானக் கடையின் முகப்பிலும் கடையின் எண், அனுமதி விவரங்கள் மற்றும் மதுபானங்களின் பாட்டில் அளவுகளுக்கு ஏற்ப விலைப்பட்டியல் தமிழில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், "மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு" மற்றும் "பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்" ஆகிய விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்கள் பெரிய எழுத்துகளில் பெயர் பலகையில் இடம்பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.