SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

”ஒரு வருஷம் பொறுங்க.. விஜய் அண்ணன் ஆட்டம் தெரியும்".. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஓராண்டு பொறுத்திருந்தால் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் தெரியும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Nov 06, 2026, 06:18 PM IST | Updated: Nov 06, 2026, 06:21 PM IST
Join

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய அரசியலை முன்வைத்து தவெக தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எதிர்கட்சிகள் தொடர்ந்து தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் விமர்சித்து வருகின்றனர். எதிர்கட்சிகள் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள், காலை 10 மணிக்கு விஜய் அண்ணாவை எதிர்த்து ஏதாவது ட்வீட் போட வேண்டும். அதன் பிறகு தூங்க சென்றுவிடுவார்கள் இதையே வேலையாக வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது

உதயநிதி தினமும் 3 ட்வீட் போடுவார். அது தொலைக்காட்சியில் வரும். வீட்டை விட்டு வெளியே வராமல் இதை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நம்மால் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. எங்கள் அண்ணன் விஜயை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதிகம் பேசாமல் செயல்களில் காட்ட வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை தவெக எப்படி செய்து வருகிறது என்பதை சாலைகளை பார்தே மக்கள் தெரிந்துக்கொள்வார்கள். தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவோம். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றையும் சீரமைப்போம்.

இது பெண்களுக்கான ஆட்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய் அண்ணா ஆட்சி. நீங்கள் தான் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள். எங்கள் பிள்ளைகள், குடும்பத்தினர் என யாரும் இதற்கு காரணமில்லை. வில்லிவாக்கத்தில் என்னை தோற்கடிப்பதற்காக ரூ.100 கோடி செலவு செய்தனர். ஆனால், நான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மக்கள் என்னை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றார்.

40 கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றவர்

தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் மக்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என முடிவு செய்ததாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

"ஒவ்வொரு தெருவிலும் பெண்கள் எங்களை அன்புடன் அரவணைத்தனர். அந்த பிரச்சாரம் தான் எங்களுக்கு தெளிவான எண்ணத்தை கொடுத்தது. மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 50 ஆண்டுகளாக ஒரு குடும்பம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த அரசியல் அமைப்பை மாற்றுவது சாதாரணமான விஷயம் கிடையாது. அனைத்து துறைகளிலும் எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

இன்னும் ஓராண்டு பொறுத்திருங்கள்

இந்த பிரச்சனைகளை ஓரிரண்டு ஆண்டுகளில் சரி செய்துவிடுவோம். 40 கட்சிகளை தைரியமாக எதிர்த்து நின்று வெற்றி பெற்றவருக்கு அரசாங்கத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க தெரியாதா?

இது அதிகாரிகளின் ஆட்சி என்று பலரும் கூறுகிறார்கள். இன்னும் ஒரு வருடம் மட்டும் பொறுத்திருங்கள். விஜய் அண்ணா எப்படி செயல்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அமைதியாக இருக்கிறார் என்றால் திட்டம் தீட்டுகிறார் என்று அர்த்தம். அது அவருடன் இருந்த எங்களுக்கு தான் தெரியும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES