“அது நான் கிடையாது..” வைரலான மாடர்ன் பெண்ணின் வீடியோ..அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!
Minister Keerthana : இணையத்தில் சமீபத்தில் ஒரு பெண்ணின் விடியோ வைரலாகி வந்தது. அது, அமைச்சர் கீர்த்தனாவா என அனைவரும் சந்தேகித்த நிலையில் அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Minister Keerthana : சமீபத்தில், முட்டிக்கு மேலே அணிந்திருக்கும் துணி முடியும் வகையில் ஒரு பெண் மாடர்ன் உடை அணிந்துக்கொண்டு, கருப்பு நிற காரில் இருந்து இறங்கி எங்கோ செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண் அமைச்சர் கீர்த்தனாவா? என சந்தேகம் வந்த நிலையில், அதற்கு அவரே தன் சமூக வலைதள பக்கங்களின் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அமைச்சர் கீர்த்தனா:
தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக இருப்பவர், கீர்த்தனா. தவெக கட்சிக்காக போட்டியிட்டு, அவர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, அமைச்சராக பதவியில் அமர்ந்த பிறகும் தொடர்ந்து பலவித சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பத்திரிகையாளர்களர்கள் கேள்வியை அணுகிய முறை, அரசு பள்ளிக்கு சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவியை ஆங்கிலம் தெரியாததற்காக விமர்சித்தது என்று இவர் செய்த பல விஷயங்கள் கடும் புயலை கிளப்பியவை ஆகும். சமீப சில நாட்களாக தான் உண்டு தன் வேலையுண்டு இருக்கும் இவரை தற்போது இன்னொரு புதிய சர்ச்சை ஆட்கொண்டுள்ளது.
மாடர்ன் உடையில் இருந்த பெண்!
சமீபத்தில் வைரலான அந்த வீடியோவில், கருப்பு நிற மாடர்ன் உடையில் ஒருபெண் இருந்தார். அவர் பார்ப்பதற்கு அமைச்சர் கீர்த்தனா போலவே மூக்குத்தி அணிந்து, முக ஜாடையும் ஒரே மாதிரி இருந்தது. இதை பார்த்த பலரும், அது அமைச்சர் கீர்த்தனாவா என கேட்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனாவே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய பதிவில், அந்த பெண் தான் என நினைத்து தன்னை விமர்சித்தவர்களை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
“ஒரு பெண் தனது அன்றாட வாழ்க்கையை இயல்பாகக் வாழும் வீடியோ ஒன்று அரசியல் ரீதியான கடும் கொந்தளிப்பை உருவாக்குகிறது என்பது, அதற்குப் பின்னால் உள்ள பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. பெண்களுக்கு எதிராகக் கடுமையான அவதூறு கருத்துகளைக் கூறுவதில் பெயர் பெற்ற ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
“அது ரொம்ப முக்கியமா?”
கீர்த்தனா தன்னுடைய பதிவில் தொடர்ந்து, ”தெளிவுபடுத்த விரும்புகிறேன்: அந்த வீடியோவில் இருப்பவர் நான் அல்ல. ஆனால் ஒருவேளை அது நானாகவே இருந்திருந்தாலும், அதனால் என்ன ஆகிவிடப் போகிறது?” என கேட்டிருக்கிறார்.
மேலும், “ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய அல்லது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?” என கேட்டிருக்கிறார்.
பெண் வெறுப்பு:
“எங்கள் கொள்கைகள், நிர்வாகம் அல்லது செயல்பாடுகள் குறித்து எங்களை எதிர்கொள்ள முடியாதபோது, அவர்கள் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளைப் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆக்கபூர்வமாகப் பேச எதுவுமற்றவர்களின் மிகப்பழமையான ஆயுதம் 'பெண் வெறுப்பு' (misogyny) மட்டுமே” என்று அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டிருக்கிறார்.
“மேலும், வெறும் தோற்ற ஒற்றுமைக்காக இதில் தேவையற்ற முறையில் இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்; உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து வாழுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.