SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

"தாங்களே வெடிகுண்டு வைத்து எடுப்பது போல".. திமுக-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு புகாரை திமுக நகைச்சுவையாக பார்க்க வேண்டும் என விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன், போலி எழுத்தாளர் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Nov 08, 2026, 07:15 PM IST | Updated: Nov 08, 2026, 07:17 PM IST
Join

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக புகார் அளித்துள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவினர் அளித்துள்ள புகாரை நகைச்சுவையாகவே பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல தாங்களே வெடிகுண்டு வைத்து, பின்னர் தாங்களே அதை எடுத்துச் செல்வது போன்ற செயல் இது என விமர்சித்தார். மேலும், போலியான எழுத்தாளர் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அவை அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் திமுக தரப்பினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நூலக திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் பெயரில் உருவாக்கப்பட்ட நூலகத்தை திறப்பதில் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

முந்தைய அரசு புத்தகங்களை வாங்குவதற்காக பிறப்பித்த கொள்முதல் ஆணையையும், கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி விடுவிப்பு ஆணையையும் தற்போதைய அரசு எவ்வாறு மாற்ற முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். கொள்முதல் ஆணையை மாற்றுவது ஒரு நடைமுறை என்றும், புத்தகங்களை ஆய்வு செய்வது மற்றொரு நடைமுறை என்றும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கத்துடன் திமுக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பபாசி அமைப்பை சேர்ந்த மூத்த பதிப்பாளர் ஒருவர் தன்னை நேரில் சந்தித்து, தனது பதிப்பகத்திலிருந்து ஒரே ஒரு புத்தகம் மட்டுமே வாங்கப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு பதிலளித்த அவர், தரமான புத்தகங்கள் அனைத்தும் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்ததாக தெரிவித்தார்.

புத்தக கண்காட்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு

தவெக ஆட்சியில் புத்தகக் கண்காட்சிகளுக்கு நிதி வழங்கப்படாது என சிலர் தவறான தகவல்களை பரப்பியதாக அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். ஆனால், முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் வழங்கப்பட்ட நிதியை விட அதிகமான தொகையை தற்போதைய முதலமைச்சர் புத்தக திருவிழாக்களுக்காக ஒதுக்கியுள்ளதாகவும், இதனை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் விவகாரத்தில் திமுக புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கேலி செய்தார். தாங்களே வெடிகுண்டு வைத்துவிட்டு, பின்னர் தாங்களே அதை எடுத்துச் செல்வது போன்ற செயல் என அவர் ஒப்பிட்டார். இதைக் கேட்ட அருகில் இருந்த அமைச்சர் வன்னியரசு சிரித்தார்.

மேலும், புகார் அளிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தட்டும் என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது அக்கட்சியினருக்கே கோபம் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

போலி எழுத்தாளர் பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள்?

'த்ரிஷா விஜய்' என்ற பெயரில் வெளியான புத்தகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை மட்டும் ஊடகங்கள் தொடர்ந்து பேசுவதாக அமைச்சர் விமர்சித்தார். மற்ற புத்தகங்களில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுவதில்லை என்றும் அவர் கேட்டார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உண்மையான நூல்களில் இருந்து 10 பக்கங்களை எடுத்துக்கொண்டு பெரிய அளவிலான அறிவுசார் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். மேலும், 'கமலாம்பாள் கருணாநிதி', 'பவுனாம்பாள் கருணாநிதி', 'மகேஸ்வரி ஸ்டாலின்' போன்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதாகவும் கூறினார்.

இந்த பெயர்களில் ஒவ்வொருவருக்கும் தலா 100 புத்தகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உண்மையிலேயே இத்தனை நூல்களை எழுதிய பெண் எழுத்தாளர்கள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அழைத்து வருமாறு ஊடகங்களுக்கு சவால் விடுத்தார். அப்படி எழுதியவர்கள் இருந்தால் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

புத்தகங்கள் பெட்டியில் வைத்து சீல் வைப்பு

போலி பெயர்களை பயன்படுத்தி அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார். சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஊடகங்களுக்கு காண்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவை முக்கிய ஆதாரங்களாக இருப்பதால் நூலகத்திலிருந்து எடுத்து பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த புத்தக கொள்முதல் விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES