SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடக்கம், 5 ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் காரைக்கால்–பேரளம் ரயில் வழித்தடச் சேவை உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் கவனம் பெறுகின்றன.

Written By R Balaji
Published: Oct 11, 2026, 08:28 AM IST | Updated: Oct 11, 2026, 08:34 AM IST
Join

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11) சென்னை வருகிறார். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பது, ரயில் நிலையங்களின் மேம்பாட்டு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது, புதிய ரயில் வழித்தட சேவையை தொடங்குவது உள்ளிட்ட நிகழ்வுகள் அவரது பயணத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இதற்காக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் இன்று கவனம் பெறுகின்றன. மெட்ரோ ரயில் சேவை தொடக்கம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வருவது, காரைக்கால் - பேரளம் ரயில் வழித்தடத்தில் சேவை தொடங்குவது என ரயில்வே துறை சார்ந்த அறிவிப்புகள் பயணிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

முதல்வர் விஜய்யுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பிரதமர் மோடி

நேற்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கும் வைக்கும் நிகழ்வை தொடர்ந்து வடபழனியில் இருந்து போரூர் வரையிலான வழித்தடத்தில் இருவரும் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் வருகையையொட்டி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதால், இன்றைய நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

14.64 கி.மீ. சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வழித்தடத்தில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இந்த வழித்தடம் பெரும்பாலும் உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வருவதன் மூலம், வடபழனி, போரூர் மற்றும் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட விவரங்களின்படி, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரை சுமார் 20 நிமிடங்களிலும் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி வரை சுமார் 18 நிமிடங்களிலும் பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 5 ரயில் நிலையங்கள்

ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நவீனப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் அம்ரித் பாரத் ராயில் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பழனி, நாமக்கல், பரமக்குடி, அம்பாசமுத்திரம் மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நகரும் படிக்கட்டுகள், நவீன கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஆகியவரை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் டிக்கெட் கவுன்ட்டர்கள் புதுப்பிக்கப்பட்டு, நடைமேடைகளின் தரைத்தளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் மூலம் ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்போருக்கு இந்த வசதிகள் உதவியாக இருக்கும்.

காரைக்கால் - பேரளம் ரயில் வழித்தடத்தில் மீண்டும் சேவை

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காரைக்கால் - பேரளம் ரயில் வழித்தடமும் இன்றைய நிகழ்வுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த வழித்தடத்தில், பின்னர் பயணிகள் பயன்பாடு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து பழைய வழித்தடம் அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் காரிகோவில்பத்து, திருநள்ளாறு, பத்தக்குடி, அம்பகரத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் ஆன்மீகப் பயணிகளிடையே புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. புதிய ரயில் சேவை தொடங்குவதன் மூலம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் விரிவாக்கம், ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல், பழைய ரயில் வழித்தடத்தில் சேவையை மீண்டும் தொடங்குதல் என பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் பிரதமர் மோடியின் இன்றைய சென்னை வருகையில் கவனம் பெறுகின்றன. இத்திட்டங்கள் நடைமுறைக்கு வருவதன் மூலம் நகர்ப்புற மற்றும் பிராந்திய போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES