Brother Stalin... இறங்கி வந்த ராகுல் காந்தி... ஸ்டாலின் கொடுத்த பதிலடி - என்னாச்சு?
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வரும் நிலையில், சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு அசைக்க முடியாத சக்தியாக உறுதியாக நின்றிருக்கிறார் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
MK Stalin - India Bloc Leaders Meet: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக அளித்திருக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணி தலைவர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த இன்று சென்னை வர உள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள், மு.க.ஸ்டாலினை இன்று மாலை 4 மணியளவில் சந்திப்பு மேற்கொள்கின்றனர்.
சகோதரர் ஸ்டாலின்...
இந்நிலையில், ராகுல் காந்தி அவரது X பக்கத்தில், "இந்தியா கூட்டணியின் மூத்தத் தலைவர்களும், நானும் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தொகுதி மறுவரையறை அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்வதற்காக சென்னை செல்கிறோம்.
850 இடங்களாக விரிவாக்கம் செய்வது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாகும். இதில் தங்களுக்குச் சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் மாற்றி அமைக்க பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும்.
சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு அசைக்க முடியாத சக்தியாக உறுதியாக நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
தேர்தலுக்கு பின் ஸ்டாலினை நோக்கி ராகுல்
கடந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்த கட்சி காங்கிரஸ் ஆகும். அதுமட்டுமின்றி விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கவும் காங்கிரஸ் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தியது.
முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டதும் பேசுபொருளானது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் கூட திமுக தலைவர் ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திக்காமல் இருந்தார். தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் சென்ற பிறகு திமுக - காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவியது. இந்தச் சூழலில்தான், ராகுல் காந்தி மு.க. ஸ்டாலினை சகோதாரர் என குறிப்பிட்டு Delimitation மசோதாவை எதிர்க்கும்படி கோரிக்கை வைத்துள்ளது கவனம் பெறுகிறது.
ஸ்டாலின் கொடுத்த பதிலடி
இந்நிலையில், மு.க. ஸ்டாலின் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாட்டின் நலன்களையும் நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.
இந்தப் பாதையில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.