Explained: வட தமிழகத்திற்கு குறி! பாஜக புது பிளான்... மாறும் மாநில தலைவர்?
TN BJP President: தமிழக பாஜக மாநில தலைவரை மேலிடம் விரைவில் மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் ரேஸில் 4 பேர் உள்ளன. எனவே, யார் அடுத்த பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
TN BJP President: தமிழகத்தில் பாஜக 1980களில் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இருந்தே இந்துத்துவம், தேசியவாதம் உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்து கட்சி செயல்பட்டு வருகிறது. 1990களில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்தது. ஆனால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், அவர்களின் கொள்கைகள் தமிழகத்தில் எடுபடாத சூழல் தான் நிலுவுகிறது. இதனால், மாநில தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி என்பது எட்டாங்கனியாக மாறிக்கொண்டே வருகிறது. இதற்கு உதாரணம் 2026 சட்டமன்ற தேர்தல் தான்.
பாஜகவும் தேர்தல்களும்
1980-ல் கட்சி தொடங்கப்பட்ட பின், 10 முறை சட்டமன்ற தேர்தலில்களில் பாஜக போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. 2.84 வாக்கு சதவீதத்தை பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வென்றது. நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி, தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு பேரடியாக விழுந்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. மயிலாப்பூர் (சென்னை), அவிநாசி, கோவை, ஆவடி, தளி, திருவண்ணாமலை, ராசிபரம், மொடக்குறிச்சி, உதகமண்டலம், தஞ்சாவூர், திருப்பூர் தெற்கு, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் ஊட்டி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் வாக்கு சதவீதமும் 3 சதவீதத்திற்கு கீழ் வந்தது. இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய பாஜக குழுவும் அமைத்தது. அதன் அடிப்படையில் சில மாற்றங்களை பாஜக மேலிடம் செய்ய உள்ளது. முதற்கட்டமாக தமிழக பாஜக மாநில தலைவர் மாற்ற மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் விரைவில் மாற்றம்?
தற்போது பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநில தலைவராக பதவியேற்றார். அவரது தலைமையில் ஒரே ஒரு தேர்தலை மட்டும் சந்தித்த நிலையில், இந்த மாற்றம் நிகழ இருக்கிறது. தேர்தல் தோல்வி, நயினார் நாகேந்திரனின் செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கையை பாஜக மேலிடம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனுக்கு முன்பாக, அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்தபோது ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரமாரியாக விமர்சனம் செய்து வந்துள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியாக முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்தார். அண்ணாமலைக்கு தனியாக இளைஞர் பட்டாளமே இருந்தது.
இந்த நிலையில், உட்கட்சி அரசியல் காரணமாக அண்ணாமலையை பாஜக மேலிடம் நீக்கியது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் நியமித்தது. நயினார் நாகேந்திரனின் செயல்பாடு பாஜக மேலிடத்தில் திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை நயினார் நாகேந்திரனை விரைவில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| ஆண்டுகள் | பாஜக மாநில தலைவர்கள் |
| 2026 | நயினார் நாகேந்திரன் |
| 2021 - 2025 | அண்ணாமலை |
| 2020 - 2021 | எல்.முருகன் |
| 2016 -2019 | தமிழிசை சௌந்தரராஜன் |
| 2014 - 2016 | பொன்.ராதாகிருஷ்ணன் |
| 2007-2013 | சி.பி.ராதாகிருஷ்ணன் |
| 2003-2006 | லா.கணேசன் |
அடுத்த பாஜக மாநில தலைவர் யார்?
நயினார் நாகேந்திரை நீக்கிவிட்டு, புதிய பாஜக மாநில தலைவரை பாஜக மேலிடம் நியமிக்க முடிவு எடுத்துள்ளது. ஆனால், புதிய பாஜக மாநில தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, அடுத்த பாஜக மாநில தலைவர் ரேஸில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். அதாவது, மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், சரத்குமார், எல்.முருகன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், அஸ்வத்தாமனை அடுத்த பாஜக மாநில தலைவராக நியமிக்க மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் இதுவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மாநில தலைவர் பொறுப்பில் இருந்ததில்லையாம். இதனால், அஸ்வத்தாமனை பாஜக மாநில தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுவரை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் கவுண்டர், நாடார், அருந்ததியர், முக்குலத்தோர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். இதனால், வன்னியர் சமூகத்திற்கு பிரநிதித்துவம் வழங்கும் வகையில், அஸ்வத்தாமனை அடுத்த பாஜக மாநில தலைவராக நியமிக்க மேலிடத்தில் கிசுகிசுக்கள் இருந்து வருகிறது.
யார் இந்த அஸ்வத்தாமன்?
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வத்தாமன்.
- ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஈடுபாடுடன் இருந்ததால், 2012ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வட மாவட்டத்தில் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவராக அஸ்வத்தாமன் உள்ளார்.
- அஸ்வத்தாமன் வட மாவட்டங்களில் பாஜகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அஸ்வத்தாமன் தற்போது பாஜகவின் தமிழ்நாடு மாநிலப் செயலாளராக இருந்து வருகிறார்.
- இவர் வழக்கறிஞராகவும் மற்றும் தீவிர இந்ததுவப் பேச்சாளராகவும் அறியப்படுகிறார்.
- இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். கோயில் நகரங்களை குறிவைத்து வேலை செய்த பாஜக, இவரை திருவண்ணாமலை தொகுதியில் நிறுத்தியது.1.56 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். இவரை தான் அடுத்த பாஜக மாநில தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராம சீனிவாசன்
- ராம சீனிவாசன் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் மதுரை காமராஜர் கல்லூரிகளில் ஆய்வாளராக பணியாற்றி, 2007ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
- அதன்பின்பு, தஞ்சாவூரில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். தொடர்ந்து, இந்துத்துவா கொள்கையில் ஆர்வம் கொண்ட அவர், 1985ஆம் ஆண்டு தன்னை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
- 2016ஆம் ஆண்டு பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இன்று வரை மாநில செயலாளராகதொடர்ந்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தார்.
- தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
- நீண்டகாலமாக கட்சியின் அமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதும், கல்வியாளர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. இதனால், இவரை நியமிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
சரத்குமார், வானதி சீனிவாசன்
தமிழக பாஜகவின் முக்கிய முகமாக வானதி சீனிவாசன் இருக்கிறார். வழக்கறிஞரான இவர், பாஜக மகளிர் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். 2021ஆம் ஆண்டு முதல்முறையாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவானார். மநீம தலைவர் கமல்ஹாசனை அவர் தோற்கடித்தார். தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வளர்ச்சிக்கு தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். இந்த ரேஸில் சரத்குமார் பெயரும் அடிப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.