Tamil Nadu Government Free Drone Training : வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றவும் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான அதிநவீன விவசாய ட்ரோன் இயக்கும் பயிற்சி மற்றும் மானியம் வழங்கும் "வெற்றி வான்மகள் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல், உரமிடுதல் மற்றும் பயிர்களைக் கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பெண்கள் உள்ளிட்ட தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொழில்முறை ட்ரோன் இயக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) நடத்தப்பட இருக்கிறது. பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே 8 நாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய முழுமையான பயிற்சி கட்டணமின்றி வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
* வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
* கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பெண்கள் உள்ளிட்ட தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
* பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பிரம்மாண்ட மானியத் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.
* பயிற்சியை நிறைவு செய்யும் நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் 50 பெண்களுக்கு, விவசாய ட்ரோன் வாங்குவதற்கு அதன் விலையில் 50% மானியம் வழங்கப்படும். இந்த மானியத் தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
* மேலும், தகுதியுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின (SC / ST) சிறு, குறு விவசாயப் பெண்களுக்கு அரசு விதிகளின்படி கூடுதல் மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள்: இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள், தேவையான ஆவணங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
* தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கிருஷ்ணகிரி அல்லது உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் துறை, ஓசூர்.
வேளாண்மையில் புதுமை படைக்கவும், சொந்தமாக ட்ரோன் வாங்கித் தொழில் தொடங்கவும் விரும்பும் விவசாயிகள் மற்றும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.