Explained: CM விஜய் புதிய அறை டெண்டர்... விதிமீறல் குற்றச்சாட்டுகளும்... தமிழக அரசின் விளக்கமும்...
Tamil Nadu Government: முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டுகளை மறுத்து, விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government: சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் முதலமைச்சரின் அலுவலகத்தை அருகில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக ரூ.5.54 கோடி மதிப்பிலான மூன்று டெண்டர்கள் வெளியிடப்பட்டன.
சட்டப்பேரவையில் காரசார விவாதம்
அந்த வகையில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட டெண்டர்களில் முறைகேடுகள் இருப்பதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின. இதனை பகிர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு அரசை நோக்கி கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) சட்டப்பேரவையில் கூட விவாதத்திற்கு வந்தது.
மறுப்பு தெரிவித்த அமைச்சர்
திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக கொறடாவான எ.வ.வேலுவும் சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் அலுவலக மாற்றத்திற்கான டெண்டர் குறித்தும், அதில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளதை சுட்டிக்காட்டியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "முதலமைச்சர் அறையை மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் இன்னும் முடிவாகவில்லை. டெண்டர் குறித்து பத்திரிகையில் வெளியான செய்தி தவறானது" என விளக்கம் அளித்தார்.
தமிழக அரசும் மறுப்பு
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளில் ஒப்பந்த விதிமீறல்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியானது தவறான செய்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை இங்கு விரிவாக காணலாம்.
தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்
பணிகள் தொடங்கப்படவில்லை
- நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மாற்றும் பொருட்டு அரங்கில் உள்ள மேஜை, நாற்காலிகள் ஒலிவாங்கி, ஆகிய தளவாடங்களை அகற்றும் பணிகள் மட்டுமே அரசு விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டது.
- டெண்டரில் கோரப்பட்ட நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
- ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்குள்ளாகவே, கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பணிகள் எப்போது தொடங்கப்படும்?
நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளானது, டெண்டர்கள் பெறப்பட உள்ள கடைசி நாளான வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று கூர்ந்தாய்வு செய்து, குறைந்த தொகையினை கோரிய ஒப்பந்ததாரருக்கு (L1-Tenderer), பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்கிய பின்னரே பணிகள் தொடங்கப்படும்.
30 நாள்கள் அவகாசம் தேவையா...?
- டெண்டர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளில் இருந்து, அரசு விதிகளின்படி ரூ.10 கோடிக்கும் குறைவாக மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து, டெண்டர்கள் பெறுவதற்கான கடைசி நாள் வரை குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.
- ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டெண்டர் ஆவணங்களை சமர்பிக்க, 30 நாட்கள் வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
- அந்த வகையில், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000-இன்படி மற்றும் அரசாணை (நிலை) எண்.19, நிதித் துறை, நாள் 20.01.2023-படி என விதிமுறைகளையும் அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
டெண்டர் விதிமீறல்கள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு தவெக அரசு பதிலளிக்க வேண்டும்!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படும் முதல்வர் அலுவலகத்திற்கான டெண்டர்களில், ஏகப்பட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதற்கான…— Nainar Nagenthran (@NainarBJP)
டெண்டர் அட்டவணை
| டெண்டர்கள் அறிவிக்கை செய்தித் தாள் மற்றும் மாநில ஒப்பந்தப் புள்ளி செய்தி மலரில் வெளியான நாள் | ஆகஸ்ட் 13 |
| டெண்டர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் | ஆகஸ்ட் 15 |
| டெண்டர் படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாள் | ஆகஸ்ட் 17 |
| டெண்டர்கள் பெறுவதற்கான கடைசி நாள் | செப்டம்பர் 1 |
15 நாட்கள் கால அவகாசம்
இந்த அட்டவணையின்படி டெண்டர்கள் அறிவிக்கை செய்தித் தாள் மற்றும் மாநில ஒப்பந்தப் புள்ளி செய்தி மலரில் வெளியான நாளில் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி நாள் (செப்டம்பர் 1) வரை உள்ள கால அவகாசம் - 18 நாட்களாக உள்ளது.
அட்டவணையின்படி டெண்டர்கள், படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து டெண்டர்கள் பெறுவதற்கான கடைசி நாள் வரை உள்ள கால அவகாசம் - 15 நாட்கள்.
ஏன் e-tender வெளியிட தாமதம்...?
மாநில ஒப்பந்தப்புள்ளி மலரில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் அறிவிக்கையில், ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதால் டெண்டர் சம்பந்தமான விவரம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் tntenders.gov.in இணையதளம் வாயிலாக கிடைக்கப்பெறும் என டெண்டர் கோரும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
பணிகளின் உத்தேச மதிப்பீடு இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'எந்த விதிமீறலும் இல்லை...'
சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 என நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளில் கோரப்பட்ட டெண்டர் இறுதி நாளான செப்டம்பர் 1ஆம் தேதி அன்று மதியம் 3 மணி வரை பெறப்பட்டு L1 Tenderer இறுதி செய்யப்பட்டு, அதன் பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, இந்த பணிகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்டதில் எவ்வித விதி மீறலும் இல்லாமல் முறையாக கோரப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.