பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு! சாதி, மத கூட்டங்களுக்கு தடை
தமிழக பள்ளிகளில் அரசியல், சாதி, மத கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான தனியார் பள்ளிகளின் வளாகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிகள், மத வழிபாட்டு அமைப்புகள் மற்றும் சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகள் நடத்துவதற்கு முழுமையான தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணையை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க | ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! ஈமச்சடங்கு நிதியுதவி உயர்வு
அரசாணையின் பின்னணி மற்றும் நோக்கம்:
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், CBSE, ஐ.சி.எஸ்.இ மற்றும் சுயநிதிப் பள்ளிகளின் தலையாய நோக்கம் மாணவர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி பாதுகாப்பான, மதச்சார்பற்ற மற்றும் அமைதியான சூழலில் தரமான கல்வியை வழங்குவதேயாகும்.
சமீபகாலமாக சில பள்ளி வளாகங்கள் மற்றும் மைதானங்களில் அரசியல் கட்சிகள், மத மற்றும் சாதிய அமைப்புகளால் கூட்டங்கள், மாநாடுகள், மத வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் பயிற்சிகள் நடத்த அனுமதி கோரப்படுவதாகவும், சில இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது பள்ளியின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதிப்பதோடு மாணவர்களின் மன அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளின் கல்விச் சூழலையும் தூய்மையையும் பாதுகாக்க இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழுமையான தடையும் விதிமுறைகளும்:
நிகழ்வுகளுக்குத் தடை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள், கட்டிடங்கள், வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதிய சங்கங்கள் சார்பில் கூட்டங்கள், மாநாடுகள், பிரச்சாரங்கள், பேரணிகள், சடங்குகள், சிறப்பு வழிபாடுகள் அல்லது பயிற்சிகள் நடத்த முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது.
விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும்: இந்தத் தடையானது பள்ளி வேலை நேரங்களுக்கு மட்டுமன்றி, மாலை நேரங்கள், வார இறுதி நாட்கள், அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மதச் செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது.
விளம்பரங்கள் மற்றும் சின்னங்களுக்குத் தடை: பள்ளி சுவர்கள், மதில் சுவர்கள் மற்றும் வளாகப் பகுதிகளில் அரசியல்/மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள் மற்றும் சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி?
பள்ளி வளாகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை பள்ளியின் கல்விச் செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், அரசுத் தேர்வுகள், அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மீறினால் ஒழுங்கு நடவடிக்கை:
மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இந்த அரசாணையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி அனுமதி வழங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள் மீது 1973 தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் உடனடி ஒழுங்கு நடவடிக்கையும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விதிமீறல்கள் குறித்துப் புகாரளிக்க ஏதுவாக, ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பிரத்யேகத் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.