குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பு! explained
tamil nadu fertility care centres : தமிழகம் முழுவதும் 30 அரசு மருத்துவமனைகளில் சித்தா கருத்தரிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
tamil nadu fertility care centres : குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் தம்பதிகளுக்குத் தமிழக அரசு மிகப்பெரிய நம்பிக்கையளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் இந்திய மருத்துவ முறையில் 'கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள்' (Fertility Care Centres) அமைக்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
சட்டப்பேரவை அறிவிப்புக்குச் செயல்வடிவம்:
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை சார்பில் 03.11.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தேசிய ஆயுஷ் இயக்கத்தின் (National AYUSH Mission) கீழ் மாநில ஆண்டு செயல் திட்டம் 2026-2027-இல் இந்தத் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கடந்த 17.08.2026 அன்று சட்டப்பேரவையில், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் இந்திய மருத்துவ முறையை ஒருங்கிணைக்கும் விதமாக 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இம்மையங்கள் நிறுவப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்குத் தற்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு மற்றும் பணியாளர் நியமனம்:
இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் (Rs. 1,03,50,000/-) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்களின் ஊதியத்திற்காக மட்டும் ரூ.72 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25 சித்தா மருத்துவர்களும், 5 யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்களும் இம்மையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.60,000 ஊதியம் வழங்கப்படும். மேலும், 30 நர்சிங் தெரபிஸ்டுகளுக்கு மாதம் ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.24 லட்சமும், விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மையங்கள் அமையும் 30 இடங்களின் பட்டியல்:
இந்த மையங்கள் அனைத்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் தாய்சேய் பராமரிப்புப் பிரிவுடன் இணைந்து செயல்பட உள்ளன.
சித்தா முறை மையங்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, கரூர், அரியலூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் சென்னை அண்ணா நகர் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை மையங்கள்: சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, தேனி (ஆண்டிபட்டி), திருவாரூர், நாமக்கல் மற்றும் நீலகிரி (ஊட்டி).
பொதுமக்களுக்குக் கிடைக்கும் பயன்கள்:
இந்த மையங்களில் கருத்தரிப்பு சிக்கல் உள்ள தம்பதிகளுக்குச் சித்தா மற்றும் யோகா முறையில் இயற்கையான சிகிச்சை, மருத்துவ ஆலோசனை, முறையான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் குறித்துச் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஏற்கனவே செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் தாய்சேய் பராமரிப்புப் பிரிவுடன் இணைந்து செயல்படுவதால், கருத்தரித்த பின்னர் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான பிரசவம் வரை ஒரே இடத்தில் முழுமையான சிகிச்சை கிடைக்கும்.
தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ முறையில் கருத்தரிப்பு சிகிச்சையைக் கொண்டு வரும் முன்னோடித் திட்டமாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத சாமானிய குடும்பங்களும் பக்கவிளைவுகள் குறைவான இயற்கை முறை சிகிச்சையைக் கட்டணமின்றிப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.