தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று, அக்டோபர் 26 ஆம் தேதி இரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்க சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாலை, இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 24ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் பேருந்து ஒன்று சிக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது.
தற்போதைய வானிலை சூழலில் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை, சின்னக்கல்லாறு மற்றும் நீலகிரியின் மலைப் பகுதிகளில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வடதமிழகம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
மேற்கு மாவட்டங்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மாலை முதல் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்கள்: தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்தப் புயலுக்கு 'அர்ணாப்' எனப் பெயரிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மத்திய ஆந்திரா அல்லது வடக்கு ஆந்திரா நோக்கி நகருமா, தெற்கு ஆந்திரப் பகுதியில் கரையை கடக்குமா என்பது அக்டோபர் 26ஆம் தேதிக்கு பிறகே தெளிவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கணிப்பின்படி, இந்தப் புயல் தமிழகத்தின் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேரடியாக மழைப்பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், புயலின் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து வடதமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு ஏற்படலாம்.
தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதையும், அவற்றின் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 25ஆம் தேதி இரவு முதல் கடல் சீற்றம் அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வோர் கடலில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும். நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீனவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி இரவு முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கெனவே கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இடி, மின்னலின்போது மரங்களின் அடியிலும் உயரமான கட்டமைப்புகளுக்கு அருகிலும் நிற்பதை தவிர்க்க வேண்டும். விவசாய பணிகளில் ஈடுபடுவோர் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.