புதிய வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்! புதிய விதிமுறைகள் இதோ
Tamil Nadu New Building Approval Rules 2026: புதிய வீடுகளுக்கான கட்டிட அனுமதி பெறுவதில் தமிழக அரசு அதிரடி மாற்றம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பு சான்றிதழ் திட்டம் விதிமுறைகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu New Building Approval Rules 2026: தமிழ்நாட்டில் சொந்தமாக வீடு கட்டத் திட்டமிட்டுள்ள சாமானிய மக்கள், சிறு வணிகர்கள் மற்றும் கட்டுமானத் துறையினருக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், கட்டிடத் திட்ட அனுமதி பெறும் நடைமுறையைத் தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019'-ல் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய 'மூன்றாம் தரப்பு சான்றிதழ்' திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 28, 2026 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் (அரசாணை நிலை எண் 179, அறிவிக்கை எண்: SRO A-20/2026) இது குறித்த விரிவான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | ரேஷன் பொருட்கள் கடத்தல்! முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
யார் இந்த மூன்றாம் தரப்பினர்? அதிகாரிகள் இன்றி அனுமதி பெறுவது எப்படி?
புதிய விதிகளின்படி (விதி 105-D), கட்டிடக் கலை கவுன்சிலில் பதிவு பெற்ற கட்டிடக் கலைஞர்கள் அல்லது திட்ட அனுமதிக்கான தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவு செய்துள்ள முதல் தரப் பதிவு பெற்ற பொறியாளர்கள் 'மூன்றாம் தரப்பினராக' அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களது சான்றிதழின் அடிப்படையில், சிறிய மற்றும் நடுத்தரக் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகளின் நேரடித் தலையீடின்றி இணையவழியிலேயே உடனடியாகத் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்.
எந்தெந்தக் கட்டிடங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்?
அனைத்துக் கட்டிடங்களுக்கும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தாது; குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது:
குடியிருப்புக் கட்டிடங்கள்: அதிகபட்சம் 750 சதுர மீட்டர் தரைத்தளக் குறியீட்டுப் பரப்பளவு, 14 மீட்டர் உயரம் (Stilt + 3 தளங்கள் அல்லது தரைத்தளம் + 2 தளங்கள்) மற்றும் 8 குடியிருப்பு அலகுகள் வரை கொண்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.
வணிகக் கட்டிடங்கள்: அதிகபட்சம் 300 சதுர மீட்டர் FSI பரப்பளவு மற்றும் 14 மீட்டர் உயரம் (Stilt + 3 அல்லது தரைத்தளம் + 2 தளங்கள்) கொண்ட சிறிய வணிகக் கட்டிடங்கள்.
தொழிற்கட்டிடங்கள்: சிப்காட், சிட்கோ, எல்காட் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் அமையவுள்ள, 2,500 சதுர மீட்டர் FSI பரப்பளவு மற்றும் 18.30 மீட்டர் உயரம் வரையிலான 'வெள்ளை' மற்றும் 'பச்சை' வகை (மாசு ஏற்படுத்தாத) தொழிற்சாலைக் கட்டிடங்கள்.
மேலும், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களைப் பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள், 2017-ஆம் ஆண்டு விதிகளின் கீழ் வரன்முறைப்படுத்தப்பட்ட மனைகள் அல்லது 20.10.2016-க்கு முன்பாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
இந்தத் திட்டம் பொருந்தாத பகுதிகள் எவை?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகரத் திட்டமிடலைக் கருத்தில் கொண்டு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகள் (CRZ), மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மலைப்பகுதிகள், சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகள், நத்தம் நிலங்கள், விவசாய நிலங்கள், திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள், சாலை விரிவாக்கம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற முடியாது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் உடனடி QR குறியீடு அனுமதி
நிலத்தின் உரிமையாளர், குத்தகைதாரர் அல்லது பவர் ஆஃப் அட்டர்னி பெற்றவர் தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் புவிசார் குறியிடப்பட்ட இடத்தின் புகைப்படங்கள், மூன்றாம் தரப்புப் பொறியாளரால் சரிபார்க்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட விற்பனைப் பத்திரம், பட்டா அல்லது TSLR நகல், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம் மற்றும் .dxf அல்லது .dwg வடிவிலான கட்டிட வரைபடங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்களைப் பதிவேற்றி உரிய அரசுக் கட்டணத்தைச் செலுத்திய அடுத்த கணமே, QR குறியீட்டுடன் கூடிய கட்டிட அனுமதி ஆணையும் வரைபடமும் இணையதளத்தில் தானாகவே உருவாக்கப்பட்டு, விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்; தேவைப்பட்டால் காலாவதியாகும் முன்பு விண்ணப்பித்து மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.
தணிக்கை மற்றும் கடுமையான தண்டனை எச்சரிக்கை
இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு கடுமையான கண்காணிப்பு விதிகளையும் வகுத்துள்ளது. இணையவழியில் அனுமதி பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 சதவீத விண்ணப்பங்கள் கணினி மூலம் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளால் நேரடித் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படிதான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான இணக்க அறிக்கையை சம்பந்தப்பட்ட பொறியாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை, விண்ணப்பதாரரோ அல்லது சான்றளிக்கும் பொறியாளரோ போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தாலோ அல்லது தவறான தகவல்களை வழங்கி அனுமதி பெற்றாலோ, வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், விண்ணப்பதாரர் மற்றும் பொறியாளர் ஆகிய இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 236-ன் கீழ் கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுத் தண்டனை பெற்றுத் தரப்படும். இதுதவிர, தவறு செய்யும் கட்டிடக் கலைஞர் அல்லது பொறியாளரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நிரந்தரமாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அரசிதழில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.