இனி சார் பதிவாளர் அலுவலகம் போகவே வேண்டாம்: செப்டம்பர் 15 முதல் புதிய நடைமுறை!
Tamil Nadu Government : சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே கடன் ஆவணப்பதிவு செய்யும் புதிய நடைமுறை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Tamil Nadu Government : பொதுமக்கள் சொத்துக்களை அடமானம் வைத்து வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது எழுதிக் கொடுக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கடன் அடைத்ததற்கான ரசீதுகளைப் பதிவு செய்ய இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இந்த இரண்டு வகை ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாகவே நேரடியாகப் பதிவு செய்யும் புதிய திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் கட்டாயமாக அமலுக்கு வர உள்ளது.
STAR 3.0 - Anywhere Registration விரிவாக்கம்:
தமிழ்நாடு பதிவுத்துறையின் 'STAR 3.0' திட்டத்தின் கீழ், ஏற்கெனவே வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் தாக்கல் செய்யப்படும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (Deposit of Title Deeds) மற்றும் கடன் திருப்பிச் செலுத்திய பின்னர் எழுதிக் கொடுக்கப்படும் இரசீது ஆவணம் ஆகியவையும் செப்டம்பர் 15 முதல் முழுமையாக ஆன்லைன் வழியிலேயே மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சார்பதிவாளர்களுக்கு ஐ.ஜி. பிறப்பித்த முக்கிய வழிகாட்டுதல்கள்:
இந்த புதிய முறை தடையின்றி நடப்பதை உறுதிசெய்ய, பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி) அனைத்து சார்பதிவாளர்களுக்கும் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்:
அதிகாரப்பூர்வ உள்நுழைவு: இவ்வகை ஆவணங்கள் அனைத்தும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரத்யேக லாகின் (Login) வழியாக மட்டுமே சார் பதிவகத்திற்கு இணையவழியில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் அன்றே பதிவு: வங்கி மூலம் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்குச் சார்பதிவாளர்கள் முழு முன்னுரிமை அளித்து, தாமதமின்றி தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினமே பதிவை முடிக்க வேண்டும்.
டிஜிட்டல் கையொப்பம்: ஆவணப்பதிவு முடிந்ததும் சார்பதிவாளரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் மீண்டும் சம்பந்தப்பட்ட வங்கியின் உள்நுழைவிற்கே இணையவழியில் திருப்பி அனுப்பப்படும்.
காரணம் இன்றி நிராகரிக்கக் கூடாது: ஆவணங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், பொதுவான காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பக் கூடாது; குறைபாட்டிற்கான தெளிவான மற்றும் குறிப்பான காரணத்தைப் பதிவு செய்து மட்டுமே அனுப்ப வேண்டும்.
பொதுமக்களுக்கு நகல் பெறுவதில் சலுகை:
இம்முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் வண்ண அச்சுப் பிரதி அல்லது PDF வடிவ ஆவணத்தை, ஆவணம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களின் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்தே நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய முறையால் பொதுமக்களின் அலைச்சல், நேரம் மிச்சமாவதுடன், பதிவு நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாகவும் விரைவாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.