SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மின்துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

Tamil Nadu Jobs : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஆள்பற்றாக்குறையினை போக்கிடும் பொருட்டு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 23, 2026, 01:38 PM IST | Updated: Aug 23, 2026, 01:43 PM IST
Join

Tamil Nadu Jobs : தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.21) எரிசக்தித்துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து. எரிசக்தித் துறைக்கான 17 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

50,000 புதிய விவசாய மின் இணைப்புகள்

2026-2027-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். நீட்டிப்பு அல்லது மேம்பாட்டு பணி தேவையில்லாத ஒருமுனை வீட்டு மின் இணைப்புகள், கள ஆய்வின்றி சுய-உறுதிமொழி அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மின் இணைப்பு பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.

கூடுதலாக 33 கி.வோ. முன்னூட்டிகள்

சென்னையில் உள்ள 20 துணை மின் நிலையங்களில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்க அருகிலுள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறுவதற்கு கூடுதலாக 33 கி.வோ. மின்னூட்டி ரூ.104 கோடி மதிப்பீட்டில், படிப்படியாக அமைக்கப்படும். 10 மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில், தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்படும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஆள்பற்றாக்குறையை போக்கிடும் பொருட்டு 2,558 காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவும், ஆரம்ப நிலைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் பொருட்டு 10,000 பணியாளர்களை 5 வருடங்களுக்கு ஒப்பந்த முறையிலும் பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தடையற்ற தரவுப் பரிமாற்றம், வசதிகள்

மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில் பாதுகாப்பு, தகவல் தொடர்பு (Protection & Communication) சாதனங்கள் ரூ.120.32 கோடியில் கொள்முதல் செய்யப்படும். ஆயுட்காலம் முடிந்த / பழமையான பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.92.3 கோடியில் மாற்றி அமைக்கப்படும்.

சென்னையில் தடையில்லா மின்சாரம்

சென்னையில் 1250 இடங்களில் உள்ள பகிர்மான மின்மாற்றி (DT) கட்டமைப்புகள், சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் வளையச் சுற்றுதர அமைப்புகளாக (RMU) மாற்றப்படும். இதன் மூலம், மாற்று மின் விநியோக ஏற்பாடு இடையூறு நேரத்தை குறைத்து தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

துணை மின்நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்துதல்

10 எண்ணிக்கையிலான 33/11 கி.வோ. துணை மின் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள மின் மாற்றிகள் 36 துணை மின் நிலையங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதுவரை பணிகள் தொடங்கப்படாத மின் மாற்றிகளின் திறன் என ரூ.129.41 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்படும்.

புதைவடப் பழுது கண்டறியும் கருவி சிறப்பு வாகனம்

மிக உயர் அழுத்த (E H V) புதைவடப் பழுதைக் கண்டறிவதற்கான காலதாமதத்தைக் குறைக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, உள்ளமைக்கப்பட்ட புதைவடப் பழுது கண்டறியும் கருவி (cable fault locator) பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு வாகனம் ரூ.17 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

மின்துறை அனைத்து தரவுகளும் ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டிற்கென ஒருங்கிணைந்த தரவுச் சேகரிப்பகம் (Integrated Data Lake), நிறுவனத் தரவுக் களஞ்சியம் (Enterprise Data Warehouse) மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கருவிகள் (Advanced Analytic Tools) ஆகியவை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 110 கி.வோ. துணை மின் நிலையங்களில் உள்ள 100 எண்ணிக்கை உள்ளீடு தனிமைப்படுத்தி (IsolatorSwitch) திறப்பான்களுக்குப்பதிலாக பிரேக்கர்களாக (Breakers) மாற்றப்படும்.

ஓய்வூதிய செயல்முறை ஒருங்கிணைப்பு

தற்போதுள்ள ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை மற்றும் அதன் கணக்கியல் அமைப்பை, நிறுவன வள திட்டமிடல் (ERP) தளத்துடன் ஒருங்கிணைக்க, தற்போது பயன்பாட்டில் உள்ள SAP நிறுவன வள திட்டமிடல் (SAP ERP) அமைப்பில் ஓய்வூதிய செயலாக்கத்திற்கான (Pension Processing) வசதி ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

e-Mandate (eNACH) மூலம் தானியங்கி மின்கட்டண வசதி

தாழ்வழுத்த (LT) மின் நுகர்வோர் e-Mandate (eNACH) பதிவு செய்தால், மின்கட்டணத் தேதியிலிருந்து 10-ஆவது நாளில், கட்டணத் தொகை பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும்.

நுகர்வோர் புகார்களுக்கு பதிலளிக்க மென்பொருள் வசதி

நுகர்வோர் தங்களது புகார்களைப் பதிவு செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கூடுதல் வழிவகையை ஏற்படுத்தும் பொருட்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில், வாட்ஸ் ஆப்பில் தானாகவே பதிலளிக்கும் ஒரு மென்பொருள் வசதி (WhatsApp Chatbot) உருவாக்கப்படும். நுகர்வோர் புகார் மேலாண்மை அமைப்புடன் (CCMS) ஒருங்கிணைக்கப்படும்.

எரிசக்தி திட்டங்களுக்கான இணைய வழி விண்ணப்பதளம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புடன் மின் இணைப்பு மற்றும் திறந்த அணுகல் (open access), BESS திட்டங்களுக்கு இணைய வழி விண்ணப்ப தளம் உருவாக்கப்படும். கழிவு அகற்றும் சுமையைக் குறைக்கவும், கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கவும், எரிசக்தி பாதுகாப்பில் பங்களிக்கவும் புதிய அழுத்தப்பட்ட உயிரிவாயு கொள்கை வகுக்கப்படும்.

பதவி உயர்வுக்கான இணைய கலந்தாய்வு

பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான நியமனங்களை மேற்கொள்ள ரூ.8.26 லட்சம் மதிப்பீட்டில் Online Counselling மென்பொருள் உருவாக்கப்பட்டு, தற்போதைய HRMS அமைப்புடன் இணைக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்தார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES