தொடர் கனமழை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rains, School College Leave: தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் கனமழை காரணமாக முதல்முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை முடித்து அனைவரும் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் வேளையில், கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை திரும்பும் மக்கள் அவதி
இடி மின்னலுடன் கூடிய கனமழை நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வருவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதியடைந்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இறுந்து சாலை வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் நகருக்குள் வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
சுரங்கப்பாதைகள் மூடவில்லை
அதேநேரத்தில், சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மோட்டர் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், 15,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
சென்னையில் தொடரும் கனமழை
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில் அதிகாலை 5.12 மணிக்கு போட்ட பதிவில், "கனமழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த மழைப்பொழிவு நகரும்போது, நகரம் முழுவதும் மழையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என பதிவிட்டுள்ளார்.
சென்னையை பொருத்தவரை வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மழைப்பதிவாகி உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனால், இன்று முதல் அக். 23ஆம் தேதிவரை அடுத்த 3 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என்றும்; வடகடலோரம், தென் கடலோரத்தில் கன முதல் மிக கனமழைக்கு இன்று வாய்ப்பு என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.