ரியல் எஸ்டேட் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழ்நாடு அரசு விதிகளில் முக்கிய மாற்றம்
Tamil Nadu Real Estate Rules : தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Real Estate Rules : தமிழ்நாட்டில் வீடு, மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிவிட்டு, கட்டுமான நிறுவனங்களின் காலதாமதம் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள புதிய தமிழ்நாடு அரசிதழ், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ஜாக்பாட்: ரூ.50,000 உதவித்தொகை
பில்டர்கள் பயன்படுத்தி வந்த 'சட்ட ஓட்டை' என்ன?
இதுவரை தமிழ்நாட்டில் வீடு வாங்கி ஏமாந்தவர்கள், RERA மற்றும் அதன் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (RERA Appellate Tribunal) அணுகி நீதி பெற்று வந்தனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் அல்லது வீட்டை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டாலும், பல பெரிய பில்டர்கள் அதனைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதற்கு முக்கியக் காரணம், 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு விதிகள், 2017'-ன் விதி 36-ல் (Rule 36) இருந்த ஒரு சலுகையாகும். ரெரா சட்டத்தின் பிரிவு 68-ன் கீழ், தீர்ப்பாயத்தின் உத்தரவை மதிக்காத பில்டர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை இருந்தாலும், அதிலிருந்து தப்பிக்க ஒரு குறுக்கு வழி இருந்தது. அதாவது, சம்பந்தப்பட்ட மனை, அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கட்டிடத்தின் மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் வரை பணத்தைச் செலுத்திவிட்டு, சிறை தண்டனையிலிருந்து சமரசம் செய்துகொண்டு வழக்குகளை முடித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதனைப் பயன்படுத்திப் பணபலம் மிக்க பில்டர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பித்து வந்தனர்.
தமிழக அரசின் புதிய அரசாணை
வீடு வாங்கிய மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்கும், நுகர்வோர் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார் அவர்களால் நவம்பர் 5 அன்று புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நவம்பர் 6 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திருத்தத்தின்படி, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் விதிகள் 2017-ன் விதி 36, துணை விதி (1)-ன் கீழ் உள்ள அட்டவணையில் இடம்பெற்றிருந்த முக்கிய வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, "பிரிவு 68-ன் கீழான சிறை தண்டனைக்குப் பதிலாக, மனை அல்லது கட்டிடத்தின் மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் செலுத்திச் சமரசம் செய்துகொள்ளலாம்" என்ற விதிமுறை தற்போது அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வீடு வாங்குவோருக்குக் கிடைத்துள்ள பலன்கள் என்ன?
சமரசத்திற்கு இடமில்லை: இனி RERA மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மதிக்காத பில்டர்கள், 10 சதவீதப் பணத்தைக் கட்டிவிட்டுச் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
சிறை தண்டனை கட்டாயம்: தீர்ப்பாய உத்தரவை மீறும் பில்டர்கள் மீது பிரிவு 68-ன் கீழ் சட்டப்படியான சிறை தண்டனை நடவடிக்கை பாய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவான தீர்வு: சிறை தண்டனைக்கு அஞ்சி, இனி பில்டர்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை விரைந்து செயல்படுத்த முன்வருவார்கள். இதனால் வீடு வாங்கியவர்களுக்கு உரிய நேரத்தில் வீடோ அல்லது இழப்பீட்டுத் தொகையோ கிடைப்பது எளிதாகும்.
நேர்மையான சந்தை: சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் போலி பில்டர்களின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் நேர்மையான ரியல் எஸ்டேட் தொழில் வளர இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கும்.
வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து சொந்த வீடு வாங்கும் சாமானிய மக்களுக்கு, தமிழக அரசின் இந்த அரசாணை ஒரு மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைந்துள்ளது.