தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான தொழில்நுட்பப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படிப்புதவித் தொகை வழங்குவதற்கான அறிவிப்பைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையின் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பங்களை 11.12.2026-க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியில் இருக்கும்போது காலமான ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஒரு ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். அதேசமயம், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி பட்டப்படிப்பு: மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்மை, செவிலியர் மற்றும் சட்டப் படிப்புஆகிய தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் படிப்புதவித் தொகையாக வழங்கப்படும்.
தொழிற்கல்வி பட்டயப்படிப்பு: 3 ஆண்டு கால தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல் இருக்கக் கீழ்க்காணும் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்:
ஒரு ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு, ஒரு முறை மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.
மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பயில வேண்டும். மேலும், முதலாம் ஆண்டு பயின்று தேர்வுகளில் எவ்வித நிலுவையும் இன்றித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.7,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழ், கடைசியாகத் தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோரின் பணி விவரம் அடங்கிய ஊதியச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்துக் கலங்களும் தமிழில் முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பணிபுரியும் பள்ளி மற்றும் வீட்டு முகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கு எண் விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்வதோடு, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலையும் கட்டாயம் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்ற புகார் எழாத வகையில், அனைத்து ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியும், அலுவலகத் தகவல் பலகைகளில் விளம்பரம் செய்தும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள், முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகப் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவ்விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, தகுதியான விண்ணப்பங்களை 11.12.2026-க்குள் சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.