பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விரைவில் பணி மாறுதல் Explained
Tamil Nadu School Education Department Transfer : பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய மாறுதல் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil Nadu School Education Department Transfer : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியிடம் அல்லது ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் உள்ளிட்ட கலந்தாய்வுகளை EMIS இணையதளம் வாயிலாக நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கையை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: அரியலூரில் செப்டிக் டேங்க் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மரணம்
கட்டாய மாறுதல் மற்றும் கலந்தாய்வு நடைமுறைகள்:
பள்ளிக்கல்வித்துறையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் அல்லது பணியிடத்தில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகிய நடவடிக்கைகள் அனைத்தும் எமிஸ் இணையதளம் வழியாகவே வெளிப்படையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தைய காலக்கெடுவும் தரவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளும்:
முதற்கட்டமாக, மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (PA to DEO) முதல் அலுவலகக் காவலர் (Watchman) வரையிலான அனைத்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் எமிஸ் இணையதளத்தில் முழுமையாகப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. விடுபட்ட விவரங்களைப் பதிவேற்ற ஏற்கனவே 25.09.2026 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்
இருப்பினும், அந்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் எமிஸ் இணையதளத்தில் உள்ள விவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது களத்தில் நேரடியாகப் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் (Physical Count), எமிஸ் தளத்தில் உள்ள பதிவுகளுக்கும் இடையே ஏராளமான விடுதல்களும், வேறுபாடுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சில பதவிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாகவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பணியமைப்புகளில் உள்ள முரண்பாடுகள்:
குறிப்பாக, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (PA to CEO - HSS and HS) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (PA to DEO) ஆகிய மூன்று பணியிடங்களும் வெவ்வேறு பணியமைப்புகளைக் (Service) கொண்டவையாகும். ஆனால் சில மாவட்டங்களில் PA to DEO என்ற ஒரே பதவியின் கீழ் 5, 6, 7 என்ற எண்ணிக்கையில் தவறாகப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று பல்வேறு பணியிடங்களிலும் எண்ணிக்கையில் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு புதிய காலக்கெடு மற்றும் கண்டிப்பான உத்தரவு:
எனவே, தங்களது மாவட்டங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட முறையான பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் எமிஸ் இணையதளத்தில் கொண்டுவருவது மிகவும் கட்டாயமாகும் என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள அலுவலகப் பணியாளர்களின் முழுமையான விவரங்களையும் எவ்விதத் தாமதமும் இன்றி வரும் 01.10.2026-க்குள் எமிஸ் தளத்தில் முழுமையாகப் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வுப் பணிகள் அனைத்தும் எமிஸ் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளதால், இப்பணியில் எவ்விதத் தொய்வும் அல்லது சுணக்கமும் இன்றி விரைந்து செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தனது சுற்றறிக்கையில் மிகவும் முக்கியத்துவத்துடன் வலியுறுத்தியுள்ளார்.