பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம்: 3 ஆண்டுகள் முடிந்தால் கட்டாய பணியிட மாறுதல்
Tamil Nadu School Education Department Transfer Rules: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் பணியிட மாற்றம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Tamil Nadu School Education Department Transfer Rules: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல், எமிஸ் இணையதளம் வழியாக மட்டுமே இந்தப் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இணையான புதிய விதிமுறை
இதற்கு முன்பு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையிலான பொது மாறுதல் கொள்கை நடைமுறையில் இருந்தது. தற்போது அதே முன்னுரிமைக் கொள்கையைப் பின்பற்றி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
இந்தப் புதிய மாறுதல் விதிமுறைகள் மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்:
இயக்குநரக வளாக அலுவலகங்கள்: பள்ளிக்கல்வி இயக்குநரகம், தொடக்கக்கல்வி இயக்குநரகம், தனியார் பள்ளிகள் இயக்குநரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - SCERT, முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் மற்றும் CIPE அலுவலகப் பணியாளர்கள்.
மாவட்ட மற்றும் கள நிலை அலுவலகங்கள்: முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் DIET / BIET நிறுவனங்களில் பணியாற்றுவோர்.
பள்ளிகள்: அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அலுவலக ஊழியர்கள்.
குறிப்பாகப் பள்ளிகளில் மட்டும் P.A. to DEO / JD, கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் Grade I, II, III ஆகிய அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் உள்ளவர்கள் இதன் கீழ் வருகின்றனர்.
பொது மாறுதல் காலம் எப்போது?
புதிய அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலம் 'மாறுதல் இல்லாத காலமாக' (Non-Transfer Period) அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் பதவி உயர்வு, பணி மாற்றம் மூலம் நியமனம், நீண்ட விடுப்பு முடிந்து பணியில் சேர்தல், பணி இறக்கம், தற்காலிகப் பணிநீக்க ரத்து மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்படும். இருப்பினும், நிர்வாக அவசரம் கருதி எந்த நேரத்திலும் மாறுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.
3 ஆண்டுகள் நிறைவடைந்தால் கட்டாய மாறுதல்
ஒரே அலுவலகத்தில், ஒரே பிரிவில் அல்லது ஒரே இருக்கையில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் கட்டாயமாக வேறு அலுவலகத்திற்கு மாற்றப்படுவார்கள். கண்காணிப்பாளர் நிலை வரை உள்ள எவரும் ஒரே பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர முடியாது. பதவி உயர்வு பெற்றாலும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பிரிவைத் தவிர்த்து வேறு பிரிவில்தான் பணியமர்த்தப்பட வேண்டும்.
மேலும், புகார் அல்லது முறைகேடு காரணமாக நிர்வாக மாறுதலில் சென்றவர்கள், மீண்டும் அதே அலுவலகத்தைக் கோர முடியாது. அதே சமயம், குரூப் 'டி' ஊழியர்கள், ஓட்டுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் பணி ஓய்வு பெற 1 ஆண்டு அல்லது அதற்குக் குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு இந்தக் கட்டாய மாறுதலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மாறுதல் பெறுவதற்கான தகுதிகள்
விருப்ப மாறுதல் கோரும் ஊழியர்கள், தற்போது பணியாற்றும் நிலையத்தில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 3 மாற்று இடங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்; அதில் ஒன்று ஒதுக்கப்பட்டால் மற்ற இரண்டும் தானாகவே ரத்தாகிவிடும்.
விருப்ப மாறுதல்கள் காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதுடன், 3 ஆண்டுகள் முடிந்து கட்டாய மாறுதலுக்காகக் காத்திருப்பவர்களுக்கு அடுத்தபடியாகவே விருப்ப மாறுதல் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், ஊழியர்களின் விருப்பமின்றி அவர்களை இடமாற்றம் செய்து, அந்த இடத்தை வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.