வணிகர்களுக்கு குட் நியூஸ்! சரக்கு லாரிகளை ரோட்டில் வழிமறிக்க தடை
Goods Lorry Owners News : வணிகர்களுக்கு குட் நியூஸ். Roving Squad முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து வணிக வரிகள் ஆணையர் அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Goods Lorry Owners News : தமிழகத்தில் இ-வே பில் சோதனையின் பெயரில் சரக்கு வாகனங்களை சாலைகளில் கண்டபடி நிறுத்தி சோதனை செய்யும் பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வணிக வரிகள் துறையின் நுண்ணறிவுப் பிரிவு செயல்படுத்தி வந்த ரோவிங் ஸ்குவாட் (சுற்றும் படை) முறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, புதிய நெறிமுறைகளுடன் கூடிய பறக்கும் படை முறையை அறிமுகப்படுத்தி வணிக வரிகள் ஆணையர் அதிரடி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பின்னணி: 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு
கடந்த 08.10.2026 அன்று நடைபெற்ற 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து வாகனங்களை வழிமறித்து இ-வே பில் ஆய்வு மேற்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தேவையற்ற தாமதங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வணிக நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம், வலுவான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இன்றி வாகனங்களைச் சந்தேகத்தின் பேரில் மட்டுமே நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவின்படி, தன்னிச்சையாக வாகனங்களைத் தடுத்து நிறுத்தும் Roving Squad முறையைக் கைவிட்டு, உளவுத் தகவல் அடிப்படையிலான இடைமறிப்பு (Intelligence-based intercepts) முறைக்கு மாறத் தமிழக அரசு தீர்மானித்தது.
வணிக வரிகள் ஆணையரின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
வணிக வரிகள் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி செயல்படுத்தப்பட உள்ள 3 முக்கிய மாற்றங்கள்:
Roving Squad பெயர் மாற்றம் மற்றும் இயக்கம்:
இனி அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி சாலைகளில் சுற்றிக்கொண்டு வாகனங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. 'ரோவிங் ஸ்குவாட்' என்ற பெயர் மாற்றப்பட்டு இனி 'பறக்கும் படை' என்று அழைக்கப்படும். குறிப்பிட்ட தகவல் மற்றும் முறையான உத்தரவு கிடைக்கும் போது மட்டுமே இவர்கள் குறிப்பிட்ட வாகனத்தைத் தடுத்து நிறுத்தப் புறப்பட வேண்டும்.
குறிப்பிட்ட உளவுத் தகவல் கட்டாயம்:
ஜிஎஸ்டி சட்ட விதிகளை மீறிச் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பதற்கான மிகத் தெளிவான, நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உளவுத் தகவல் இருக்க வேண்டும். அந்தத் தகவல் e-office போன்ற மின்னணு நேர முத்திரை முறையில் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இணை ஆணையரின் எழுத்துப்பூர்வ அனுமதி:
பதிவு செய்யப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தப் போதுமான முகாந்திரம் உள்ளது என்பதை நம்புவதற்கான காரணங்களை இணை ஆணையர் அல்லது அதற்கு இணையான உயர் அதிகாரி எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து உத்தரவிட வேண்டும். அத்தகைய அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கும் வரை பறக்கும் படையினர் இணை ஆணையர் அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.
கடுமையான கண்காணிப்பும் உடனடி அமலும்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இணை ஆணையர்களும் (நுண்ணறிவுப் பிரிவு) சற்றும் வழுவாமல் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த நடைமுறைகளைத் கூடுதல் ஆணையர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சாலைகளில் அநாவசியமாக சரக்கு வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிப்பதும், டிரைவர்களையும் வணிகர்களையும் அலைக்கழிக்கும் போக்கும் இனி முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதால் வணிகர் சங்கங்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை வெகுவாக வரவேற்றுள்ளனர்.