வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் மழை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வலுவடைந்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த வாரம் வட தமிழகத்தை நோக்கி மழை மேகங்கள் நகர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் முக்கியமான மாதமாக நவம்பர் மாதம் கருதப்படும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவே, புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்திற்கு மழையை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
இதற்கிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) அதிகாலை வெளியிட்ட வானிலை எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
மேலும், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கரூர், நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்கால் பகுதிக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் மிதமான மழை!
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நாளை (நவம்பர் 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (நவம்பர் 14) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மிக லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானிலை எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.