Tamil Nadu Government Employees Loan : தமிழகத்தில் உள்ள பணியாளர் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் பிணையக் கடன் உச்சவரம்பை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுவரை அதிகபட்சமாக ரூ.20 லட்சமாக இருந்த கடன் உச்சவரம்பு தற்போது ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பணியாளர் கூட்டுறவு வங்கிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கி வரும் தனிநபர் கடன் உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன. இக்கோரிக்கையை பரிசீலிக்கவும், கடன் வைப்பு விகிதத்தை உயர்த்தவும், உபரி நிதியைப் பயன்படுத்தி கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பு கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழு சமர்ப்பித்த விரிவான பரிந்துரைகளின் அடிப்படையில், கூடுதல் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட கடன் தொகையை ஊழியர்கள் பெறுவதற்கு கூட்டுறவுத்துறை பின்வரும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது:
அதிகபட்ச கடன் உச்சவரம்பு: ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் தொகையானது அதிகபட்சமாக ரூ.35 லட்சம் அல்லது சம்பந்தப்பட்ட ஊழியரின் மொத்த மாத ஊதியத்தின் 25 மடங்கு — இதில் எது குறைவோ, அந்த தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும்.
5% பங்குத்தொகை பிடித்தம்: கடனாக வழங்கப்படும் தொகையில் 5 சதவீதத்தை (5%) சங்கத்தின் பங்குத்தொகையாக உறுப்பினரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
25% குறைந்தபட்ச நிகர ஊதியம் உறுதி: ஊழியரின் மொத்த மாத ஊதியத்திலிருந்து புதிய கடன் தவணைகள் மற்றும் அனைத்து முந்தைய பிடித்தங்களையும் கழித்த பின்னர், ஊழியர் கையில் பெறும் நிகர ஊதியம் மொத்த ஊதியத்தில் குறைந்தது 25 சதவீதமாவது இருக்க வேண்டும்.
பணியாளர் கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதிநிலையை ஆய்வு செய்து, உயர்த்தப்பட்ட உச்சவரம்பின் அடிப்படையில் கடன் வழங்கும் வகையில் உரிய துணைவிதி திருத்தங்களை சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் பதிவு செய்த பிறகே கடன் வழங்க அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை சற்றும் வழுவாமல் பின்பற்றி, தகுதியான உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,00,000/- வரை தனிநபர் பிணையக் கடன் வழங்கப்படுவதை அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடு கட்டுதல், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற அவசர நிதித் தேவைகளுக்கு தனியார் நிதி நிறுவனங்களை நாடாமல், குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளிலேயே அதிக நிதி உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.