டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை
Tasmac Digital Payment: டாஸ்மாக் கடைகளில் ரூ.1000க்கு மேலான விற்பனை தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பெறும் நடைமுறை இன்று (நவம்பர் 23) அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறை சென்னை மண்டலம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Tasmac Digital Payment: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து டாஸ்மாக் கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தவெக அரசு செய்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்த உடனேயே முதற்கட்டமாக முதல்வர் விஜய் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தலங்களுக்கு அருகில் உள்ள மதுபான கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனம், தனது 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் மற்றும் ஐந்து மண்டல மேலாளர் அலுவலகங்கள் மூலம், தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,048 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளையும், 23,000 டாஸ்மாக் பணியாளர்களை கொண்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இயக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ரூ.1,000க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, ரூ.1,000க்கு மேல் மதுபானம் வாங்குபவர்களிடம் இருந்து ரொக்கமாக பணம் வாங்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1,000க்கு மேல் மதுபானம் வாங்குவோர் யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு வழியாக பணத்தை செலுத்த வேண்டும். ரொக்க பணத்திற்கு பதிலாக, கடைகளில் உள்ள பிஓஎஸ் கருவிகள் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ ஸ்கேன் செய்து பணம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 மற்றும் அதற்கு குறைவான பரிவர்த்தனைகள் வழக்கம் போல் ரொக்கம் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் இரண்டிலும் தொடரும் என டாஸ்மாக நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது. தொடக்கமாக, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல் மற்றும் திருவள்ளூர் கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும் டிஜிட்டல் கட்டண முறை மட்டுமே செயல்படுத்தப்படும்.
டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறுகள், நெட்வொர்க் சிக்கல்கள் மற்றும் இயந்திரங்கள் செயலிழப்பது போன்றவற்றை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. யுபிஐ பரிவர்த்தனைக்கு கூடுதலாக ரூ.1000 மதிப்பிலான ஸ்கேனிங் கருவியை அறிமுகப்படுத்துவது தங்கள் பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் மட்டுமே அதிகரிக்கும். நிர்வாகம் கள நிலவரம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அது குறித்து முறையான பகுப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், பிஓஎஸ் கருவுகளில் ஏற்கனவே 8 வகையான தொழில்நுட்பக் கோளாறுகள் நிலவுவதாகவும், இதனை முதலில் சரி செய்ய வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.