தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு இறக்கப்படும் நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் புகார்கள் எழுந்து வந்தன. இதனை முழுமையாகத் தடுக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) நாமக்கல் மாவட்ட மேலாளர் அலுவலகம் சார்பில் அனைத்து கடைப் பணியாளர்களுக்கும், போக்குவரத்து ஒப்பந்ததாரர்களுக்கும் மிக முக்கியமான புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கிடங்கில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மதுபானங்களைப் பாதுகாப்பாக ஏற்றி வந்து இறக்கி வைப்பது முழுமையாக போக்குவரத்து ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானப் பெட்டிகளை இறக்குவதற்கு போக்குவரத்து ஒப்பந்ததாரர் தங்களது சொந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை இந்த வேலைகளில் ஈடுபடுத்தவோ அல்லது அவர்களிடம் இருந்து ஆட்களைக் கோரவோ கூடாது எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனைக் கடைகளுக்கு லாரிகளில் இருந்து மதுபானப் பெட்டிகள் இறக்கப்படும் போது, ஒவ்வொரு பெட்டியையும் கையடக்கக் கருவி மூலம் ஸ்கேன் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதுபானப் பெட்டிகளை முழுமையாக ஸ்கேன் செய்து, அதில் உள்ள சரக்குகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்வது கடைப் பணியாளர்களின் நேரடி பொறுப்பாகும். எக்காரணத்தைக் கொண்டும் ஸ்கேன் செய்யாமல் சரக்குகளைக் கடைக்குள் இறக்கவோ அல்லது இருப்பு வைக்கவோ அனுமதிக்கப்படாது.
சரக்குகளை லாரியில் இருந்து கடைக்குள் இறக்கி வைப்பதற்காக கடை ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஒப்பந்ததாரர் அல்லது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு ரூபாய் கூட பணப் பரிவர்த்தனை நடைபெறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அனைத்துக் கட்டணங்களும் மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமாகவே நேரடியாக போக்குவரத்து ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும் என்பதால், கடைகளில் தனியாகப் பணம் வசூலிக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக வழிகாட்டுதல்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை மதுபானக் கடைப் பணியாளர்களும், போக்குவரத்து ஒப்பந்ததாரர்களும் இந்த விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறைகளை மீறுவோர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.