SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராமர் - லட்சுமணன் ஒற்றுமை.. பிளவில் அதிமுக.. சமாதானப்படுத்தும் ஆர்.பி.உதயகுமார்!

எடப்பாடி கே.பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி இடையே விரிசல் இல்லை; கே.பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணியும் ராமர் லட்சுமணன் போன்றவர்கள். கருத்து வேறுபாடுகளை அறைக்குள் பேசித் தீர்க்க வேண்டும்; இருவர் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் காத்திருக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Nov 23, 2026, 14:45 IST | Updated: Nov 23, 2026, 15:04 IST
Join

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் ஒற்றுமையைப் பொதுவெளியில் விவாதிப்பதைத் தவிர்த்து, மூத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது கட்சியினர் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இபிஎஸ் - வேலுமணி விவகாரம்

தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைப்பது, ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்களும் யூகங்களும் பரவியதாகவும், ஆனால் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறாத சூழலில், அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்ததாகவும், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 27 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மற்றும் கொறடாவின் உத்தரவுகளை மீறி தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பின்னர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளிக்க முன்வந்தபோது, பேரறிஞர் அண்ணாவின் 'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்ற கருத்துக்கு ஏற்ப அவர்களது கடிதத்தை ஏற்றுக்கொண்டு தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வார்த்தையை விட்ட இபிஎஸ்.. கொதித்தெழுந்த எஸ்பி வேலுமணி.. பிளவை நோக்கி அதிமுக!

தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு ஒட்டுமொத்த கட்சியினருக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி மீது மட்டும் பழி சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டே எடப்பாடி பழனிசாமி பல்வேறு முடிவுகளை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் - லட்சுமணன் போன்ற நெருக்கமான ஒற்றுமை

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே ராமர் - லட்சுமணன் போன்ற நெருக்கமான ஒற்றுமை இருந்ததாகக் கூறிய அவர், இருவரும் இணைந்து களப்பணியாற்றினால் அதிமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை கட்சித் தொண்டர்களிடையே நிலவுவதாகவும் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிவித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை எஸ்.பி.வேலுமணி ஏற்றுக்கொண்டு செயல்படாமல் இருந்ததால்தான், கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுகவில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர் என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாக ஆர்.பி.உதயகுமார் விளக்கியுள்ளார்.

வேலுமணி அந்தப் பொறுப்பை ஏற்று கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு கூறியதாகத் தொண்டர்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவிலிருந்து வெளியேறிய சிலர் தனிக்கட்சி தொடங்கியும், வேறு கட்சிகளில் இணைந்தும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்காகக் கட்சிக்குள் இருக்கும் தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆட்சியை நடத்துவது 3 டம்மி முதல்வர்கள் தான்... CM விஜய்க்கு ஒன்றும் தெரியாது - இபிஎஸ் பேச்சு

 ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

அதிமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; தமிழக மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று குறிப்பிட்ட ஆர்.பி.உதயகுமார், எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை ஜெயலலிதா வளர்த்ததாகவும், தற்போது எடப்பாடி பழனிசாமி அதைக் கட்டிக்காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, அதிமுகவில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைப் பொதுவெளியில் பேசுவது கட்சியின் நலனுக்கு உகந்ததல்ல என்று தெரிவித்த ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் தனியாக அமர்ந்து அமைதியாகப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் சேவையைத் தொடரவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் தனது வீடியோவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: தவெக அரசின் லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது -எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES