திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!
Tiruvannamalai Deepam Girivalam: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tiruvannamalai Deepam Girivalam: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வரும் நவம்பர் 24ஆம் தேதி ஏற்றப்பட உள்ளது. இதற்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பூஜைகள் தினமும் நடந்து வருகிறது. திருவண்ணாமலை கோயிலில் நவம்பர் 24ஆம் தேதி அன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில், கார்த்திகை மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 23.11.2026-ந் தேதி முதல் 25.11,2026-ந் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக புதிய மத்திய பேருந்து நிலையம் 01 மற்றும் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 155 கார் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பேருந்து நிலையம், கார் நிறுத்தும் இடங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் இருக்கும் ஸ்கேனரை ஸ்கேன் செய்வதன் மூலம் தாங்கள் செல்லவேண்டிய இடத்தை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க: 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... ஒரு வாரம் வச்சு செய்யப்போகுது மழை!
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் குற்றத்தடுப்பு மற்றும் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.
பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள Champhor pit-களில் மட்டுமே கற்பூரம் ஏற்ற வேண்டும். மற்ற இடங்களில் குறிப்பாக மாட வீதியிலோ அல்லது கிரிவலபாதையிலோ எக்காரணத்தை கொண்டும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுதந்திரமாக உலாவவிடக்கூடாது. மேலும் பக்தர்கள் கால்நடைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதை தவிர்க்கவும்.
உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும், உடன்வரும் வயதானவர்களையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
எதற்கெல்லாம் தடை?
பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். யாரையும் நம்பி ஒப்படைக்கவேண்டாம். பக்தர்கள் கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகள் மற்றும் காட்டுப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்கவும். கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுகொள்ளப்படுகிறது.
பக்தர்கள் தங்களது காலணிகளைத் தங்கும் விடுதிகளிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ விட்டுவரவும், மேலும் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்பாடு செய்யபட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி கொள்ளவும். மாடவீதிகள் மற்றும் கோபுரங்களுக்கு முன்பாக காலணிகளை விட்டு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீப்பி மற்றும் ஊதுகுழல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும். மேற்கூறிய பொருட்கள் சட்ட நடவடிக்கையைப் பின்பற்றி பறிமுதல் செய்யப்படும்.
பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பது குற்றமாகும். மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை மீது ஏறக்கூடாது என மாவட்ட நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் மருத்துவ உதவி பெறலாம். உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும். பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள காவல் உதவி மையத்தை (May I Help You Booth) அணுகலாம். கீழ்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த உதவி எண்கள் 24 மணி நேரமும் செயல்படும். அவசர உதவி எண் 100, தீபம் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9344978100, காணமல்போனவர் பற்றி தகவல் தெரிவிக்க 7904117100/8838175094/9087373200 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.