TNHB Explained: வீட்டு வசதி வாரிய வீடு வாங்க இன்று முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சொந்தமாக வீடு, நிலம் வாங்கு வேண்டும் என்பது நடுத்தர, ஏழை, எளிய மக்களின் கனவாக இருக்கிறது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் வீடு, மனை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்று கட்டுமான செலவுகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வீடு, மனை வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாங்கனியாக மாறியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்காக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் (TNHB) மூலம் மாநிலம் முழுவதும் குறைந்த விலையில் எளித தவணை மற்றும் குறைந்த முன்பணத்தில் வீடுகள் மற்றும் மனைகளை வழங்கி வருகிறது.
இடைதரகர்கள் இன்றி ஆன்லைன் மூலமாகவே நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் உள்ள 6,775 வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளை வெளிப்படையான முறையில் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்ற ஆண்டு வெறும் 2,630 அலகுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், இந்த முறை அதைவிட இரண்டரை மடங்கு அதிகமாக அலகுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
19 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய வீட்டை பெற விண்ணப்பிக்கலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நெல்லை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஓசூர், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில மலிவு விலை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், காலி மனைகள் உள்ளன.

குலுக்கள் முறையில் 2,842 வீடுகளும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 2,184 வீடுகளும், பொது ஒதுக்கிடு முறையில் 1,749 அலகுகள் என மூன்று வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் குலுக்கள் முறையில் வீடு, மனையின் விலையை பொறுத்தவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.2.98 கோடி வரையிலான சொத்துக்கள் உள்ளன.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை அலகு விலையை பொறுத்தவரை, ரூ.5 லட்சம் முதல் ரூ.1.31 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ஒதுக்கிடு முறையில் உள்ள அலகுகள் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.1.46 கோடி வரை உள்ளது.

| வ.எண் | ஆவணங்கள் விவரம் |
| 1. | கடவுச்சீட்டுக்குரிய அளவிலான சமீபத்திய புகைப்படம் |
| 2. | வயதுச் சான்று சான்றிதழ் (PDF) |
| 3. | பூர்வீக சான்றிதழ் (PDF) |
| 4. | வருமானச் சான்றிதழ் (PDF) |
| 5. | நிரந்தர கணக்கு எண் - PAN (PDF) (விருப்பத்தேர்வு) |
| 6. | ஆதார் அடையாள அட்டை (PDF) |
| 7. | விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் ஊடுகதிர் (Scan) செய்யப்பட்ட கையொப்பங்கள் |
| 8. | இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஏதேனும் இருந்தால் (PDF) |
| 9. | சாதிச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால் (PDF) |
உள்ளாட்சி அமைப்புகள், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், துணைப் பதிவாளர் மற்றும் பதிவாளர் (பிறப்பு (ம) இறப்பு) அவர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழ், பள்ளி இறுதிச் சான்றிதழ் அல்லது கல்வி நிறுவனத்தால் பள்ளி மாற்று சான்றிதழ்.
படிக்காத நபராக இருந்தால், உதவி சிவில் சர்ஜன் பதவிக்குக் குறையாத பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரால் வழங்கப்படும் வயதுச் சான்றிதழ் விண்ணப்பதாரர் உள்ளூர் வட்டாட்சியரிடமிருந்து வழக்கமான படிவத்தில் பெறப்பட்ட பூர்விக சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.
அரசு / பொது நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் மாதாந்திர சம்பளம் பெறும் நபர்கள், அந்தந்த துறை / அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெறப்பட்ட வருமானச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.