விஜய் கட்சியில் நடக்கும் ஊழல்? பதவிக்கு ரூ. 10 லட்சம்? வெளியான ஆடியோ!
தவெகவில் கட்சிப் பதவிகளுக்கு பணம் பெறப்பட்டதாக நிர்வாகி ஜோயல் குற்றம்சாட்டிய நிலையில், 500 ஆடியோக்கள் வெளியிட்டாலும் அஞ்ச மாட்டேன் என மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சி பொறுப்புகளை வழங்குவதற்காக பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகார் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவுக்கு எதிராக கட்சி நிர்வாகி ஜோயல் வெளியிட்ட ஆடியோவும், அதற்கு பதிலளித்து முஸ்தபா முன்வைத்த குற்றச்சாட்டுகளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கட்சி பதவிக்கு பணம் பெற்றதாக ஜோயல் குற்றச்சாட்டு
மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி ஜோயல் வெளியிட்ட ஆடியோவில், கட்சிப் பொறுப்புகளைப் பெற்று தருவதற்காகப் பணம் கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே வெளியான ஆடியோவை தான்தான் கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாகவும், பின்னர் அது சமூக வலைதளங்களில் பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைப் பெற்று தருவதற்காக தன்னிடம் ரூ.10 லட்சம் வரை பெறப்பட்டதாக பலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் ஜோயல் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை கட்சி தலைமை அல்லது காவல்துறையிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்க்கு ஆதரவளித்த நிலையில், கட்சிக்குள்ளேயே பதவிகளுக்குப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் புகார் வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கவும், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என ஜோயல் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு முஸ்தபா மறுப்பு
இதற்கிடையே, ஆரப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை\ சந்தித்த எம்எல்ஏ முஸ்தபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசியுள்ளார்.
கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் சிலர் ஆடியோவைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கனிராஜா, சபரி ஆகிய இருவரையும் அழைத்து விசாரித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெகவின் வெற்றிக்காகத் தேர்தல் நேரத்தில் சொந்தச் செலவில் உழைத்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
500 ஆடியோ வெளியிட்டாலும் அஞ்ச மாட்டேன்!
தனக்கு எதிராகப் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்த முஸ்தபா, 50 ஆடியோக்கள் அல்ல, 500 ஆடியோக்கள் வெளியிடப்பட்டாலும் பயப்பட மாட்டேன் என்று சவால் விடுத்துள்ளார். மேலும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் தவெக வெற்றி பெறும் என்ற அச்சத்திலேயே தங்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக மற்றும் பாஜக மீதும் விமர்சனங்களை முன்வைத்த அவர், மதுரையில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.