SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், அவரது பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Written By Sudharsan G
Published: Oct 03, 2026, 07:04 AM IST | Updated: Oct 03, 2026, 07:22 AM IST
Join

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி நிலவும் சூழலில், தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் (அக். 5) நிறைவடைகிறது.

மதுராந்தகத்தில் நேற்று (அக். 2) மதியம் தொடங்கி மாலை வரை முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார். இரண்டு தொகுதிகளிலும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained

மு.க. ஸ்டாலின் தீவிர பரப்புரை

அதேபோல், அனைத்து கட்சியினரும் பரபரப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் நேற்று தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

காலையில் ரோடு ஷோ மேற்கொண்ட ஸ்டாலின் மாலையில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் தவெக வேட்பாளர் சத்யபாமாவை தாக்கி பேசினார்.

சர்ச்சையாகும் மு.க. ஸ்டாலின் பேச்சு

மக்களே இப்போது பெட்டி பாமா, பல்டி பாமா என சத்யபாமாவை விமர்சிப்பதாக பேசிய அவர், "எப்படி அந்த உருவத்தை வைத்துக்கொண்டு பல்டி அடிக்கிறாரோ தெரியவில்லை" என பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பெண் வேட்பாளரை நோக்கி உருவ கேலி செய்யும் வகையில் மு.க. ஸ்டாலின் பேசியதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமைச்சர் ரமேஷ் கண்டனம்

இந்நிலையில், தவெக அமைச்சர்களும் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவரது X பதிவில் அவரது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அதில், "தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை உருவகேலி செய்யும் வகையில் முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா?" என சாடி உள்ளார்.

மேலும் படிக்க | TNSTC ஆன்மீக சுற்றுலா... 1 நாளில் 14 வைணவ கோவில்களுக்கு போகலாம்... கட்டணம் எவ்வளவு?

அரசியல் நாகரிகத்தை படியுங்கள்...

ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது என்றும்; பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டு மண்ணில், ஒரு பெண் வேட்பாளரை பொதுமேடையில் கேலி செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேடைதோறும் அண்ணாவையும் பெரியாரையும் தங்களது வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்ளும் கோபாலபுரம் குடும்பத்தினர், பெண்களின் சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி குறித்து அந்த தலைவர்கள் கூறிய கருத்துகளை முதலில் படிக்கட்டும் என்றும் அதன் பிறகாவது அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளட்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

அரசியல் கருத்துக்கு அரசியல் பதில் கொடுங்கள் என்றும் ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது அரசியல் அல்ல; அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி எனவும் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு சாடி உள்ளார்.

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்

தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவிடம் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், தமிழ்நாட்டு பெண்கள் முன்னிலையிலும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்; பெண்களை இழிவுபடுத்தும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், "தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார், இதை வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு  தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்றும் ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்திவிட்டார் என்றும் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுவே திமுகவின் டிஎன்ஏ

அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் இதுதான் திமுகவின் டிஎன்ஏ என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் அருண்ராஜ், தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரம்பரைத் தலைவர்களின் வழக்கம்

சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அவரது X தளத்தில், "நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி  கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில்  இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது" என சாடி உள்ளார்.

தோல்வியின் உச்சகட்ட விரக்தி

மேலும், பெண்ணியம் பற்றியும் கொள்கைத் தலைவர்களின் புரட்சி சிந்தனைகள் பற்றியும் பக்கம் பக்கமாக சொற்பொழிவு ஆற்றும் திமுகவினரின் உண்மை முகமே இதுதான் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டதால் இனி எப்போதும் மக்கள் ஆதரவை திமுக பெறப்போவது இல்லை என திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த உண்மை தெரிந்ததால் தோல்வியின் உச்சகட்ட விரக்தியில் இருக்கும் திமுக இது போன்ற கொச்சைப் பேச்சுகளைக் கடைசி ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறது என்றும் திமுக தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வியூகம் வகுக்கும் விஜய்! தவெக ஆட்சிக்கு ஆபத்தா? நவம்பர் 13-ம் தேதியின் பின்னணி என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES