POSH ACT 2013 Explained: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது, டிசம்பர் 11ஆம் தேதிவரை அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
இந்தச் சம்பவத்தில் POSH சட்டம் எனப்படும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இங்கு ஒரு முக்கியமான சட்ட நுணுக்கம் இருக்கிறது. POSH சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையும், காவல்துறை மேற்கொள்ளும் குற்றவியல் விசாரணையும் தனித்தனியானவை என்பதும் கவனிக்க வேண்டும்.
POSH சட்டம் என்றால் என்ன...? இச்சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்கான வரையறைகள் என்ன...?, இந்த சட்டத்தின்படி புகார் அளிப்பது எப்படி...? POSH விசாரணைக்கும் என்ன வித்தியாசம்...? ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
1. POSH சட்டம் என்றால் என்ன?
POSH என்பதன் விரிவாக்கம்: Prevention of Sexual Harassment of Women at Workplace (பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம்)
எப்போது கொண்டுவரப்பட்டது: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது, புகார்களை விசாரித்து உரிய நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கான கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.
POSH சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
- பெண்கள் பாதுகாப்பான பணிச்சூழலில் பணியாற்றுவதை உறுதி செய்தல்.
- பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுத்தல்.
- புகார்களை விசாரிக்க அமைப்புகளை உருவாக்குதல்.
- குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகுத்தல்.
- அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
2. எதெல்லாம் பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும்?
POSH சட்டம் பாலியல் துன்புறத்தலுக்கான வரையறையை வழங்கி உள்ளது. அதில் முக்கியமானதாக:
- விருப்பமில்லாத உடல் ரீதியான அணுகுமுறை அல்லது தொடுதல்.
- பாலியல் சலுகைகளைக் கோருதல்.
- பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவித்தல்.
- ஆபாசமான படங்கள் அல்லது உள்ளடக்கங்களைக் காட்டுதல்.
- பாலியல் தன்மை கொண்ட விரும்பத்தகாத வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்கள்.
மேலும் இத்தகைய செயல்கள் தொடர்பான சூழ்நிலைகளும் சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படலாம்.
3. POSH சட்டத்தின்படி புகார் அளிப்பது எப்படி?
இந்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வகையான புகார் குழுக்கள் உள்ளன.
- 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள பணியிடங்களில் அமைக்கப்பட வேண்டும்.
- தலைவராக மூத்த பெண் ஊழியர் இருக்க வேண்டும்.
- குறைந்தது இரண்டு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
- பெண்கள் நலனில் ஈடுபட்ட NGO அல்லது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- பெண்கள் நலனில் ஈடுபட்ட NGO அல்லது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- மொத்த உறுப்பினர்களில் குறைந்துத பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
10க்கும் குறைவான ஊழியர்கள் உள்ள பணியிடங்கள் அல்லது ICC அமைக்கப்படாத சூழல்களில் மாவட்ட அளவிலான லோக்கல் கமிட்டியிடம் புகார் அளிக்கலாம்.
4. புகார் அளிக்க கால அவகாசம் எவ்வளவு?
- POSH சட்டத்தின் பிரிவு 9-இன்படி, சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.
- தொடர்ச்சியான சம்பவங்களாக இருந்தால் கடைசியாக நடைபெற்ற சம்பவத்தில் இருந்து 3 மாதங்கள் கணக்கிடப்படும். உரிய காரணங்கள் இருந்தால் மேலும் 3 மாதங்கள் வரை கால அவகாசத்தை நீட்டிக்கலாம்.
- பிரிவு 11-இன்படி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
- விசாரணை முடிந்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். அதன் பரிந்துரைகள் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் என்ன?
பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரில் இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள்:
- பெண் அதிகாரிக்கு ஆட்சேபனைக்குரிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியது.
- பொது நிகழ்ச்சிகளில் விரும்பத்தகாத அணுகுமுறையை வெளிப்படுத்தியது.
- அவரது உடை மற்றும் தோற்றம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது.
- அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு இரவு நேரத்தில் செல்ல முயன்றது.
இவை அனைத்தும் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
6. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கும்... POSH சட்டமும்...
- இந்த வழக்கின் முக்கிய அம்சமே இதுதான். மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரி என்பதால் அவர் பணியாற்றும் அரசு அலுவலகம் POSH சட்டத்தின் கீழ் பணியிடமாக கருதப்படுகிறது.
- அதேபோல், பணியிடத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளின்போது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களும் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வரலாம்.
- குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் அந்த அலுவலகத்தின் ஊழியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. POSH சட்டத்தின் பிரிவு, எதிர்வாதி என்பதற்கு புகார் அளிக்கப்பட்ட நபர் என்று பொதுவான வரையறையை வழங்குகிறது.
- குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் அந்த பணியிடத்தின் ஊழியர் அல்லாதவராக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால் அவருக்கு எதிராகப் பிற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க நிறுவனம் உதவ வேண்டும் என்று பிரிவு 19(h) குறிப்பிடுகிறது.
இந்த வழக்கில் அமைக்கப்பட்ட ICC
- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு, இந்தப் புகாரை விசாரிக்க நான்கு பேர் கொண்ட ICC அமைக்கப்பட்டுள்ளது.
- 4 பேர் கொண்ட இந்த குழுவுக்கு ககர்லா உஷா ஐஏஎஸ் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மதுமதி, பி.சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினராக உள்ளனர்.
- இந்த குழு 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து POSH சட்டத்தின்படி பரிந்துரைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள்
அருள் விக்னேஷ் POSH சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்வில்லை. காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது BNS மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ்,
| BNS 75 | பாலியல் துன்புறுத்தல் |
| BNS 78 | பின்தொடர்தல் |
| BNS 79 | பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கிலான வார்த்தை அல்லது செயல் |
| BNS 132 | அரசு ஊழியர் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல் |
| தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், பிரிவு 4 | பெண்களைத் துன்புறுத்தல் தொடர்பான குற்றம் |
8. POSH விசாரணைக்கும், காவல்துறை விசாரணைக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டு விசாரணைகளும் ஒரே நேரத்தில் நடைபெறலாம். ஆனால் அவற்றின் நோக்கங்கள் வேறுபட்டவை.
| அம்சம் | POSH விசாரணை | காவல்துறை விசாரணை |
| நோக்கம் | பணியிடப் பாலியல் துன்புறுத்தலை விசாரித்தல் | குற்றவியல் குற்றத்தை விசாரித்தல் |
| விசாரணை அமைப்பு | ICC/லோக்கல் கமிட்டி | காவல்துறை |
| சட்டம் | POSH சட்டம் 2013 | BNS உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் |
| நடவடிக்கை | பணியிட நடவடிக்கை, சேவை விதிகளின்படி தண்டனை, இழப்பீடு பரிந்துரை | கைது, குற்றப்பத்திரிகை, நீதிமன்ற விசாரணை |
| முடிவு | குழுவின் விசாரணை அறிக்கை | நீதிமன்றத்தின் தீர்ப்பு |
POSH சட்டத்தின் பிரிவு 28-இன்படி, இந்த சட்டம் மற்ற சட்டங்களின் செயல்பாட்டைத் தடுக்காது. எனவே, POSH விசாரணையும் குற்றவியல் விசாரணையும் தனித்தனியாகத் தொடர் முடியும்.
முடிவு: இந்த வழக்கு ஏன் முக்கியமானது?
- POSH சட்டம் என்பது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களு்ககு மட்டுமே பொருந்தக்கூடிய சட்டம் அல்ல. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில், ஒரு மக்கள் பிரதிநிதிக்கு எதிராகவும் இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
- இந்த வழக்கில் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ICC விசாரணை. மற்றொன்று, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை மேற்கொள்ளும் குற்றவியல் விசாரணை.
- இரண்டையும் தனித்தனியாகப் புரிந்துகொள்வதே இந்த வழக்கின் சட்டப் பின்னணியைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும்.