Explained: பேரவையின் 110வது விதி என்றால் என்ன? இது ஏன் முக்கியம்? முழு விவரம்
TN Budget 110 Rule Explained: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். எனவே, 110 விதி என்றால் என்ன? எதற்காக அதை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
TN Budget 110 Rule Explained: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி வரை அனைத்து துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. தினமும் துறை வாரியாக விவாதம் நடந்து வருகிறது.
இதற்கிடையில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திடீரென சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அதிரடி அறவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுஎன்ன விதி 110 என்ற கேள்வி பலரும் எழுந்து வருகிறது. எனவே, சட்டப்பேரவை விதி 110 என்றால் என்ன? இதன் கீழ் வரும் அறிவிப்புகள் ஏன் விவாதிக்கப்படவில்லை என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
110 விதி என்றால் என்ன?
சட்டப்பேரவையின் 110 விதி இருக்காலாமா, வேண்டாமா என்ற கருத்தும், விவாதமும் அரசியல் விமர்சகர்களிடையே இன்றும் இருந்து வருகிறது. ஏனென்றால், அரசு ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது, அதனை மக்கள் பிரநிதிகளிடம் கேட்டு, அதுபற்றி விவாதித்து அத்திட்டத்தை கொண்டு வருவது தான் சரியாக இருக்கும் என இன்றும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என முன்னாள் முதல்வர்கள் 110 விதியின் கீழ் ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஜோசப் விஜய்யும் இணைந்துள்ளார். எனவே, 110 விதி என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 208(1) பிரிவின்படி தமிழக சட்டப்பேரவை விதிகள் இயற்றப்பட்டன. இதன்படி, புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள், கொள்கை முடிவுகள், பிரச்னைக்கான நடவடிக்கை பற்றி அவசரமாக அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்றால், அதை சட்டப்பேரவை விதிஎண் 110-ன் கீழ சபாநாயகர் அனுமதியுடன் அறிவிக்கலாம் என்ற விதி உள்ளது.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் சபாநாயகர் அனுமதியுடன் முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் ஒருவர் அறிவிப்புகளை வெளியிடலாம். சாதாரணமாக சட்டப்பேரவையில் ஒரு மசோதா அல்லது தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தி, கருத்துகளை தெரவித்து, தேவையான மாற்றங்களை முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏன் விவாதம் நடைபெறுவது கிடையாது?
சட்டப்பேரவை 110 விதியின் கீழ் வரும் அறிவிப்புகள் மீது எந்த விதமான விவாதமும் நடக்காது. அதாவது, 110-ன் கீழ் முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அது எந்த இடத்திற்கும் விவாதம் வைக்க முடியாது.
110-ன் கீழ் வரும் அறிவிப்புகளை பாராட்டுகள் தெரிவிக்கலாமே தவிர, எதிர்க்கட்சியினர் உள்பட யாரும் அதை விவாதம் நடத்த முடியாது. சட்டமன்ற விதியின்படி, இந்த அறிவிப்புகளை விவாதம் நடத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஏனென்றால், 110 விதி என்பது அவசர காலத்துக்கு மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டது.
இதனை எம்ஜிர், கலைஞர் கருணாநிதி அவசர காலத்திற்கான அறிவிப்புகளுக்காகவே மட்டுமே பயன்படுத்தினர். ஆனால், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவை கூட்டத்தொடரின போதெல்லாம் விதி 110-ன் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதிகமுறை 110 விதியைப் பயன்படுத்தியது யார்?
இதுவரை ஆட்சி செய்த முதலமைச்சர்களிலேயே சட்டப்பேரவை விதி 110-ஐ யார் அதிகம் பயன்படுத்தி, அதிக அறிவிப்புகளை வெளியிட்டனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எடப்பாடி பழனிசாமி
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டாராம்.
- அவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் 453 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டதாக தகவல் கூறப்படுகிறது.
- 2017 - 2021ஆம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 453 அறிவிப்புகளை வெளியிட்டதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதா
- அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
- ஜெயலலிதா 1991, 2001ஆம் ஆண்டுகளின் ஆட்சிக்காலத்தில் 110 விதியை அதிகமாக பயன்படுத்தவில்லையாம்.
- ஆனால், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையான ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா 110 விதியை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
- 2011 - 2016 வரை 181 முறை 110 விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தாலும் கூட, ஜெயலலிதா கூட்டத்தொடரின் போது அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.
இதுகுறித்து அப்போதைய சபாநாயகர் தனபால்,
"110வது விதியின் கீழ் சுமார் 181 அறிவிப்புகளை வெளியிட்டு, முதல்வர் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்” என குறிப்பிட்டார்.
இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்ஜிர் போன்றோர் சட்டப்பேரவையின் 110 விதியை அதிகம் பயன்படுத்தவில்லை. இவர்கள் அவசர காலத்தின்போதும், முக்கியமான நிகழ்வுகள், பிரச்னையின்போதும், அரசின் நிலைபாட்டை தெரிவிக்கும்போதும் தான், இந்த 110 விதியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மற்றப்படி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தான், 110 விதியை பயன்படுத்தினார்களாம். மேலும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் அளவாக 110 விதியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுவரை முதல்வர் விஜய் அறிவித்தது என்ன?
இந்த வரிசையில் தற்போது முதல்வர் விஜய்யும் இணைந்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் விஜய் வெளியிட்டார்.
- வடசென்னை மக்களின் விரைவாக மருத்துவ சிகிச்சைக்காக, பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
- அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
- முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.
- 1.22 லட்சம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனை தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 38-ல் இருந்து ரூ 41 ஆக உயர்த்தப்படும்.
- அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும். இதற்கு மாதம் படியாக ரூ.75000 வழங்கப்படும்.
- ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
- நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000, பொது ரக நெல்லுககு ரூ.2600 வழங்கப்படும்.
இதுவரை 110 விதியின் கீழ் இத்தனை அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். இன்னும் கிட்டதட்ட 5 ஆண்டு கால ஆட்சி இருக்கும் நிலையில், 110 விதியின் கீழ் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மிஞ்சுவரா, இல்லை அவர்களை விட கம்மியான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.