Explained: தகைசால் தமிழர் விருது என்றால் என்ன? இதுவரை விருது பெற்றவர்கள் யார் யார்?
Thagaisal Thamizhar Award: தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தின விழாவின் போது 'தகைசால் தமிழர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை தகைசால் தமிழர் விருதை வென்ற ஆளுமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் குறித்த பட்டியலை இங்கு காணலாம்.
Thagaisal Thamizhar Award, Explained : 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு, மூவர்ணக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். 13வது முறையாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசிய கீதம் இசைக்க, மூவர்ணக்கொடியை ஏற்றினார். முதல்முறையாக முதலமைச்சர் விஜய் கோட்டையில் கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு விருதாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
தகைசால் தமிழர் விருது
அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்நிலையில், தகைசால் தமிழர் விருது எதற்காக வழங்கப்படுகிறது?, விருதுடன் என்னவெல்லாம் வழங்கப்படும்?, இதுவரை விருதை வாங்கியவர்கள் யார் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
தகைசால் தமிழர் விருது என்றால் என்ன?
'தகைசால்' என்பது பெருமை மிகுந்த சான்றோர்கள் என பொருள். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய பெரும் ஆளுமைகளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், தகைசால் தமிழர் விருதை வழங்கி வருகிறது. இது தமிழ்நாடு அரசின் உயர் விருதாக கருதப்படுகிறது.
தகைசால் தமிழர் விருது எப்போது தொடங்கப்பட்டது?
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், அதாவது 2021ஆம் ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமைக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுடன் வழங்கப்படும் பரிசுகள் என்னென்ன?
தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை விருது வாங்கியவர்கள் யார் யார்?
அந்த வகையில், இதுவரை விருது வாங்கிய 6 ஆளுமைகள் மற்றும் அவர்களின் சமூக பங்களிப்புகளை இங்கு வரிசையாக பார்க்கலாம்.
1. என். சங்கரய்யா (2021)
- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான என். சங்கரய்யாவுக்கு 2021ஆம் ஆண்டில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. முதல்முறையாக இவ்விருதை வாங்கியவரும் இவரே.
- மாணவர் பருவத்திலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.
- சிபிஎம் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளுக்காக தீவிரமாக போராடி, 3 முறை எம்எல்ஏவாக இருந்தார். இவர் 2023ஆம் ஆண்டில் மறைந்தார்.
- கொரோனா காலத்தில் விருதை பெற்ற சங்கரய்யா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, பரிசுத்தொகையை வழங்கினார்.
2. ஆர். நல்லகண்ணு (2022)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு, பொதுவுடைமை இயக்கத்தின் முன்னணிப் போராளியாக அறியப்பட்டவர். 2022ஆம் ஆண்டில் தகைசால் தமிழர் விருதை பெற்றார்.
- இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர். அடக்குமுறைகளையும் எதிர்கொண்டவர்.
- விவசாயத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தெருவில் இறங்கி போராடியவர்.
- குறிப்பாக, தாமிரபரணி ஆற்று மணல் கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்திலும், களத்திலும் போராடியவர்.
- அரசியலிலும், பொது வாழ்விலும் நேர்மை, எளிமை, தூய்மை, ஆகியவற்றின் அடையாளமாக விளங்குபவர்.
- தகைசால் தமிழர் விருதுக்கு ரூ.10 லட்சம் தொகை வழங்கப்பட்ட நிலையில், அத்துடன் அவரது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இவர் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி அன்று மறைந்தார்.
3. கி. வீரமணி (2023)
- திராவிடர் கழகத்தின் தலைவரான கி.வீரமணி 2023ஆம் ஆண்டில் தகைசால் தமிழர் விருதை வென்றவர். சமூகநீதிப் போராளியாக அறியப்படுகிறார்.
- தந்தை பெரியாரின் வழியில் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை ஆகியவற்றிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக தொடர் சட்டப் போராட்டங்களையும் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர்.
- 'விடுதலை', 'உண்மை' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டு முற்போக்கு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
4. குமரி அனந்தன் (2024)
- மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
- சிறந்த தமிழறிஞர், இலக்கியப் பேச்சாளராக அறியப்பட்டவர். காந்தியக் கொள்கைகளில் தீவிர பற்றுடையவர்.
- மதுவிலக்கு, தேசிய ஒருமைப்பாடு, நதிநீர் இணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பாதயாத்திரையை மேற்கொண்டவர்.
- நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தூய தமிழில் உரையாற்றி, தமிழுக்கான உரிமைகளை நிலைநாட்டியவர். இவர் பல நூல்களையும் எழுதி உள்ளார். இவர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி மறைந்தார்.
5. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (2025)
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவரான கே.எம். காதர் மொகிதீன் கடந்த 2025ஆம் ஆண்டில் தகைசால் தமிழர் விருதை பெற்றர். சிறந்த கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளராக அறியப்படுபவர்.
- தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, மனிதநேயம் மற்றும் இஸ்லாமிய-சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்த பல தசாப்தங்களாகப் போராடி வருபவர்.
- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். இக்கல்லூரியில் இவர் ஆயிரக்கணக்கான மாணவர்களை திறம்பட உருவாக்கியவர்.
- 2004ஆம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். தமிழ் இலக்கியம், இஸ்லாமிய நெறிகள், சமூக விழிப்புணர்வு தொடர்பான பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.
6. எம். கிருஷ்ணசாமி
- மூத்த காங்கிரஸ் தலைவரான எம். கிருஷ்ணசாமி 2026ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை பெற்றார். முதலமைச்சர் விஜய் இன்றைய 80வது சுதந்திர தின விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
- 2006-2008 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றியவர். 1991 மற்றும் 2009 மக்களவை தேர்தலில் முறையே வந்தவாசி, ஆரணி தொகுதிகளில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
- சுதந்திரப் போராட்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பல தசாப்தங்களாக தமிழக அரசியலிலும், பொது வாழ்விலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
- தர்மபுரி எம்எல்ஏவும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணியின் தந்தைதான் எம். கிருஷ்ணசாமி. இவரது மகன் விஷ்ணு பிரசாத் தற்போதைய சிட்டிங் கடலூர் மக்களவை உறுப்பினர் (காங்கிரஸ்).
தமிழ்நாட்டின் சமூகநீதி, இலக்கியம், விடுதலைப் போராட்டம் மற்றும் அரசியல் தளங்களில் முத்திரை பதித்த ஆளுமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய அடையாளமாக தகைசால் தமிழர் விருது விளங்குகிறது.