Kallakurichi MLA Arul Vignesh Case: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஐஏஎஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டில் இரும்புக் கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டில், இரும்புக் கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ், நேற்று தனது வீட்டில் முதல் தளத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படும் வீடியோ வெளியான நிலையில், தற்போது அவரது வீட்டின் முன்பகுதியை மறைக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது கவனம் பெற்றுள்ளது.
இதற்காக இன்று ஆட்டோவில் இரும்பு பைப்புகள் ஏற்றி வரப்பட்டு, அவரது வீட்டின் அருகே இறக்கப்பட்டன. தொடர்ந்து, வீட்டின் பக்கவாட்டுப் பகுதிகளில் பைப்புகளைப் பொருத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இரும்பு பைப்புகள் தேவையான அளவுகளுக்கு வெட்டப்பட்டு, தடுப்புகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டின் முதல் தளத்தில் உள்ள முகப்புப் பகுதியில் எந்த அளவிற்கு தடுப்புகள் அமைத்து மறைக்கலாம் என்பது குறித்து அளவீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வீட்டின் முன்பகுதியை முழுமையாக மறைக்கும் வகையில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே, எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வீட்டின் முகப்புப் பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் முதல் தளத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தடுப்புகள் அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து எம்எல்ஏ தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. மேலும், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வான அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அருள் விக்னேஷ் வீட்டின் முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்டஎஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை அறிக்கை நாளைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எஸ்பி சிருஷ்டி சிங் தனது தலைமையிலான விசாரணைக் குழுவுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
எம்எல்ஏ அருள்விக்னேஷிடம் காவல்துறை இதுவரை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எம்எல்ஏ தரப்பில் வழக்கறிஞரை நியமித்துத் தங்களது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்பதற்கான காவல்துறை நோட்டீஸ் மட்டுமே நேற்று வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.