Theni Varusanadu School Student Latest News: தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தப் பள்ளியில் மஞ்சனூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் ஆகிய மலைக் கிராமங்களைச் சேர்ந்த 18 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
நேற்று (நவ. 25) மதியம் ஒரு சில பள்ளி குழந்தைகள் காட்டு ஆமணக்கு விதைகளை விளையாட்டாகச் சாப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆமணக்கு விதைகள் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்ததாகவும், அதை பறித்து குழந்தைகள் தவறுதலாக உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படியிருக்க, பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், குழந்தைகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதற்றமடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
உடனே குழந்தைகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இன்று (நவ. 26) காலையும் குழந்தைகள் சிலர் மயக்கமடைந்தனர். காலையில் பள்ளிக்கு வந்தவர்களில் 10 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பள்ளிச் சீருடையிலேயே ஆம்புலன்ஸ் மூலம் அவர்களும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனியில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கான பாதிப்பு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் அதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமணக்கு விதையைச் சாப்பிட்டால் ரிசின் என்ற நஞ்சு உடலில் கலக்கும். அந்த விதையை சாப்பிடுவது விஷத்தன்மையை உண்டாக்கும் என்பதால் உடனடி மருத்துவ உதவி தேவையாகும்.
அந்த ரிசின் நஞ்சு உடலில் புரத உற்பத்தியைத் தடுத்து செல்களைச் சேதப்படுத்தும் என்றும் சில மணி நேரங்களில் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவை அனைத்தும் முதற்கட்ட அறிகுறிகளாகவும் கூறப்படுகிறது.
இதை போன்ற முதற்கட்ட அறிகுறிகள் தென்படும் போதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது. விஷத்தன்மை தீவிரமடைந்தால் இன்னும் சிக்கலான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, குழந்தைகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம், அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்வதும் சிறந்தது ஆகும்.