திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Trichy latest news : திருச்சி மாவட்ட இளைஞர்களே தாட்கோ நடத்தும் இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் தொடர்பான பயிற்சிகளில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Trichy latest news : தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்குத் தனியார் துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், தமிழக அரசின் "வெற்றிப்படி திட்டத்தின்" கீழ் பல்வேறு நவீனத் தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கழகத்துடன் (ICT Academy) இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர், மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர், மென்பொருள் வடிவமைப்பாளர் மற்றும் காப்பீட்டு முகவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
இந்தப் பயிற்சித் திட்டமானது சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று முக்கிய மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்படும் பயிற்சிகளின் விவரங்களும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாவட்டத்தில் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் (Junior Software Developer), Web Developer மற்றும் பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர், மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய ஆறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், மதுரை மாவட்டத்தில் மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர், மென்பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகளில் சேருவதற்கான கல்வித் தகுதி மற்றும் இதர நிபந்தனைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. மென்பொருள் சார்ந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் இளங்கலை பொறியியல் அல்லது பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி சார்ந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் இளங்கலை வணிகவியல் அல்லது இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இப்பயிற்சிகளை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படுவதுடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகத் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnadw.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.