திருச்சி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் மானியம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
திருச்சி தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரி ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY) திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் பழப் பயிர்களின் சாகுபடியைப் பெருக்கும் வகையில் புதிய மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விவசாயிகள் தங்களது நிலங்களில் நிரந்தர கல்தூண் பந்தல் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார்.
மானியம் மற்றும் திட்ட மதிப்பீடு விவரங்கள்:
கொடிவகை பயிர்களான பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், கோவக்காய், அவரை, பீன்ஸ், பட்டாணி, திராட்சை மற்றும் பேஷன் பழம் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நிரந்தர கல்தூண் பந்தல் அமைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு மொத்த திட்ட மதிப்பீடாக ரூ.6 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையில் 50 சதவீதம் வரை, அதாவது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
எவற்றிற்கெல்லாம் மானியம் கிடைக்கும்?
இத்திட்டத்தின் கீழ் நிலத்தைத் தயார் செய்தல், கல்தூண்கள் நடுதல், பந்தல் கட்டமைப்பு ஏற்படுத்துதல், ஜி.ஐ. (GI) கம்பிகள் பொருத்துதல், தரமான நடவுப் பொருட்கள் வாங்குதல் மற்றும் நடவுப் பணிகளுக்கான கூலிச் செலவுகள் என பந்தல் அமைக்கும் அனைத்துக் கட்டமைப்புப் பணிகளுக்கும் மானிய உதவி பொருந்தும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பயன் பெற முடியும்.
ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது.
பந்தல் அமைக்கும் போது அதனுடன் இணைத்து நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்பையும் அமைப்பது அவசியமாகும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் பரிசோதனை அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், பயனாளியின் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகளால் அமைக்கப்படும் நிரந்தர கல்தூண் பந்தல்கள், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை அலுவலர்களால் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, மானியம் விடுவிக்கப்படுவதற்கு முன்பாகப் புவிக்குறியீடு செய்யப்பட்டு 'கிரிஷி மேப்பர்' போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.