8வது ஊதியக் குழு: அமலாக்கம், ஊதிய திருத்தம், அரியர்... அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
8th Pay Commission: ஊழியர்களுக்குத் திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதற்கு முன்னதாக, ஒரு ஊதியக் குழு பல்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். 8வது ஊதியக் குழு, நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கடக்க வேண்டிய பல்வேறு நிலைகள் என்ன?
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான தருணமாகும். ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் குறித்து முடிவெடுக்கவுள்ள 8வது ஊதியக் குழு, அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் மற்றும் அறிவிப்பைத் தொடர்ந்து, 8வது மத்திய ஊதியக் குழு 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அமலாக்கத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், புதிய ஊதிய விகிதங்கள் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக் குழு
பொதுவாக, ஊழியர்களுக்குத் திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதற்கு முன்னதாக, ஒரு ஊதியக் குழு பல்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். 8வது ஊதியக் குழு, நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கடக்க வேண்டிய பல்வேறு நிலைகள் என்ன? ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக் குழு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளை மறுஆய்வு செய்து, மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கப்போவதாக 2025 ஜனவரியில் அரசு அறிவித்தது.
செயல்பாட்டு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல்
2025 அக்டோபர் 28 அன்று, மத்திய அமைச்சரவை 8-வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாட்டு வரம்புகளுக்கு (Terms of Reference - TOR) ஒப்புதல் அளித்தது. அமைச்சரவையின் முடிவின்படி, 8-வது ஊதியக் குழுவானது ஒரு தலைவர், பகுதிநேர உறுப்பினர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பாகச் செயல்படும். பரிந்துரைகளை வழங்கும்போது, நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் நிதிச் சிக்கனம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழுவின் அமைப்பு
2025 நவம்பர் 3 அன்று, 8-வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதில் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராகவும், புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க, அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பங்குதாரர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் ஆலோசனைகள்
8வது ஊதியக் குழு, 2026 பிப்ரவரியில் பங்குதாரர்களுடனான ஆலோசனைச் செயல்பாட்டைத் தொடங்கியது. இதற்காக 18 கேள்விகளைக் கொண்ட ஒரு வினாத்தாள் வெளியிடப்பட்டு, பதில்கள் கோரப்பட்டன. மேலும், 2026 மார்ச் மாதத்தில், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் விரிவான குறிப்பாணைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பிரத்யேக வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பாணைகள் மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக ஏப்ரல் 30-ஐ முதலில் நிர்ணயித்தது. இருப்பினும், இது நேரில் நடைபெறும் கலந்தாலோசனைகளிலிருந்து வேறுபட்டிருந்தது; அவை இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. கலந்தாலோசனைகளின் சமீபத்திய சுற்று அக்டோபர் 22-23 தேதிகளில் மும்பையிலும், அக்டோபர் 7-8 தேதிகளில் பெங்களூருவிலும் நடைபெற்றது.
பரிந்துரைகளைத் தயாரித்தல்
ஆரம்பகட்ட பங்குதாரர் கலந்தாலோசனைகள், தரவு சேகரிப்பு மற்றும் குறிப்பாணை சமர்ப்பிப்புகளை முடித்த பிறகு, 8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை வரைவு செய்து தயாரிக்கும் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளில் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஓய்வூதியம், பணிக்கொடை, வீட்டு வாடகைப்படி மற்றும் பிற படிகள் ஆகியவை அடங்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அப்டேட் என்ன?
அடுத்ததாக, மத்திய அர்சு ஊழியர்கள் இந்தச் செயல்முறையின் அடுத்த கட்டங்கள் பரவலாக பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன:
- பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்
- அரசாங்க ஆய்வு
- அரசாங்க ஒப்புதல்
- அமலாக்க உத்தரவுகள்
சம்பள உயர்வு தாமதமாகிறதா?
8வது ஊதியக் குழு காலதாமதமாகச் செயல்படவில்லை. அதன் பரிந்துரைகளை வழங்க, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆகவே, நடைமுறையில், அதன் காலக்கெடு 3 மே 2027 அன்று முடிவடைகிறது.
8வது ஊதியக் குழு செயலாக்கம் எப்போது?
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. 2026 ஜனவரி 1 என்பது அதிகாரப்பூர்வமான அமலாக்கக் காலக்கெடு அல்ல. ஊதியக் குழுக்களின் பரிந்துரைகள் பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்ற வழக்கத்தின் அடிப்படையில், 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அமலாக்கத் தேதியை அறிவிக்கவில்லை. அது முந்தைய தேதியிலிருந்து (retrospective) அமல்படுத்தப்படுமா இல்லையா என்பதும் இன்னும் தெரியவில்லை. எனினும், 8வது ஊதியக் குழு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய தொகை அரியர் தொகையாக கிடைக்கும்.