தீபாவளி பண்டிகை காலம் நெருங்கிட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளுக்குத் தேவையான புதிய ஏசி, ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின் அல்லது பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்களை பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிரடி விலை உயர்வுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் தீபாவளிக்கு புதிய பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பங்கள் தங்களது பட்ஜெட்டை கூடுதலாக ஒதுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏர் கண்டிஷனர்கள்: இந்த விலை உயர்வில் அதிக பாதிப்பை சந்திக்கவிருப்பது ஏசி வாங்கத் திட்டமிடுவோர்தான். ஏசிகளின் விலை 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயரக்கூடும் என தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி நிறுவனமான ப்ளூ ஸ்டார் ஏற்கனவே ஏசிகளின் விலையை 8 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றத் தயாராகி வருகின்றன. உதாரணமாக, ரூ.50,000 மதிப்பிலான ஏசிக்கு 8 சதவீத விலை உயர்வு அமலானால், கூடுதலாக ரூ.4,000 வரை நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும்.
எல்இடி டிவி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்: சில முன்னணி தயாரிப்பாளர்கள் எல்இடி டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் துணி துவைக்கும் இயந்திரங்களின் விலையை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.
தாம்சன்: தாம்சன் இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தனது அனைத்து வகை தயாரிப்புகளின் விலையையும் 10 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளது. அதே சமயம், இன்டெக்ஸ் போன்ற சில நிறுவனங்கள் பண்டிகைக் கால விற்பனையைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு விலை உயர்வை தள்ளி வைத்துள்ளன.
ஒரு தயாரிப்பு விற்பனை நிலையத்தை வந்தடைவதற்கு முன்பாகவே, அதன் தயாரிப்புச் செலவில் ஏற்படும் கடுமையான அழுத்தமே இந்த விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது:
மூலப்பொருட்களின் விலை ஏற்றம்: ஏசி உள்ளிட்ட பல சாதனங்களின் முக்கிய உதிரிபாகங்களுக்குத் தேவையான செம்பு மற்றும் அலுமினியத்தின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. மேலும், உடற்பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் எஃகு மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புக்கான கச்சா எண்ணெய் வழித்தோன்றல்களின் விலையும் உயர்ந்துள்ளது.
செமிகண்டக்டர் மற்றும் சிப் தட்டுப்பாடு: ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட நவீன சாதனங்களுக்குத் தேவையான மெமரி சிப்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் காட்சித் திரை உபகரணங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள்: உலகளவில் நிலவும் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக சரக்குக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்குக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், பல சரக்குகள் துறைமுகங்களில் 20 முதல் 30 நாட்கள் வரை தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் தயாரிப்பு அட்டவணையை கடுமையாகப் பாதித்துள்ளது.
நாணய மதிப்பு மாற்றங்கள்: சர்வதேச நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களின் செலவை அதிகரித்துள்ளன.
அக்டோபர் 1 முதல் நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், அனைத்து விற்பனை நிலையங்களிலும் உடனடியாக அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிடாது.
ஸ்டாக்கில் உள்ள பொருட்கள்: தீபாவளி பண்டிகைக் கால விற்பனையை முன்னிட்டு பெரும்பாலான டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஏற்கனவே பழைய விலையிலேயே பெருமளவிலான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். எனவே, அந்த பழைய ஸ்டாக் விற்றுத் தீரும் வரை நுகர்வோர்கள் முந்தைய விலையிலேயே அல்லது பழைய ஆஃபர்களிலேயே பொருட்களைப் பெற முடியும்.
வங்கி சலுகைகள் EMI: பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க நிறுவனங்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ, உடனடி கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபாவளிக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கத் திட்டமிடும் நுகர்வோர்கள், போர்டுகளில் அறிவிக்கப்படும் விளம்பரத் தள்ளுபடிகளை மட்டுமே நம்பி முடிவெடுக்காமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். தயாரிப்பு எந்த தேதியில் உற்பத்தி செய்யப்பட்டது, பழைய ஸ்டாக்கில் கிடைக்கிறதா, இறுதி பில் தொகை எவ்வளவு, வங்கி கார்டு சலுகைகள் மற்றும் இஎம்ஐ கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை முழுமையாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதே பணத்தை மிச்சப்படுத்த உதவும்.