Explainer: DA, TA உயர்வு... அகவிலைப்படியுடன் அரசு ஊழியர்களுக்கு பயணப்படியும் அதிகரிக்கும், எவ்வளவு தெரியுமா?
DA Hike News: அகவிலைப்படி (DA) அதிகரிக்கும் போதெல்லாம், அதற்கேற்ப போக்குவரத்துப்படியும் (Transport Allowance) உயர்கிறது. இதனால் தகுதியுள்ள ஊழியர்கள் அகவிலைப்படி விகிதத்துடன் தொடர்புடைய கூடுதல் தொகையைப் பெறுகிறார்கள். அகவிலைப்படி விகிதம் ஜனவரி 2026-ல் 60 சதவீதத்தை எட்டியது.
DA Hike: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜூலை 2026 முதலான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த செய்தி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வுடன் அதிகரிக்கும் போக்குவரத்துப்படி
மத்திய அரசு 4 சதவீத உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், அதன் தாக்கம் அகவிலைப்படியுடன் (Dearness Allowance) மட்டும் நின்றுவிடாது. போக்குவரத்துப்படியிலும் (Travel Allowance) உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
- குறிப்பாக, ஊதிய நிலை 9 (Pay Level 9) மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள ஊழியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
- 'X' வகை நகரங்களில் பணியில் உள்ள ஊழியர்கள் மாதம் கூடுதலாக ₹360 வரை போக்குவரத்துப்படியைப் பெறலாம்.
- அதேவேளையில் 'Y' மற்றும் 'Z' வகை நகரங்களில் உள்ளவர்கள் மாதம் ₹180 வரை உயர்வைப் பெறக்கூடும்.
அகவிலைப்படி உயர்வுக்கான அடிப்படை என்ன?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு சிறிய நிவாரணம் அளிக்கும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வுதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை திருத்தப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் 'தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு' (AICPI-IW) தரவுகள் மூலம் இவை கணக்கிடப்ப்படுகின்றன. இந்தக் குறியீடு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது.
டிஏ உயர்வுக்கான கணக்கிடு
- ஜூலை 2026-க்கான அகவிலைப்படி திருத்தத்திற்காக கடந்த 12 மாதங்களின் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
- இக்குறியீடுகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீத உயர்வு சாத்தியம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
- தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் 60 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
- 4 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால் அது 64 சதவீதமாக உயரும்.
- அதே சமயம் 3 சதவீத உயர்வு அளிக்கப்பட்டால் அகவிலைப்படி 63 சதவீதமாக இருக்கும்.
ஊழியர் சங்கங்களின் கருத்து என்ன?
அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பின் (All India NPS Employees Federation) தலைவர் மஞ்சித் சிங் படேல், இம்முறை அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்வு இருக்கலாம் என்று கருதுகிறார். இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே இறுதி முடிவு தெரியவரும்.
போக்குவரத்துப்படி (TA) மீது அகவிலைப்படி உயர்வின் தாக்கம் எப்படி இருக்கும்?
7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின் கீழ், போக்குவரத்துப்படியானது ஊழியரின் ஊதிய நிலை மற்றும் அவர்கள் பணியமர்த்தப்பட்ட நகரத்தின் வகைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நகரங்கள் X, Y மற்றும் Z என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியப் பெருநகரங்கள் 'X' வகையின் கீழ் வருகின்றன. இங்குப் போக்குவரத்துப் படி (TA) விகிதங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன.
தற்போது, அகவிலைப்படி (DA) 60% ஆக உள்ள நிலையில், ஊதிய நிலை 9 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள ஊழியர்கள், அடிப்படைப் படிக்கு மேலாக, 'X' வகை நகரங்களில் மாதம் ₹4,320-ம், 'Y' மற்றும் 'Z' வகை நகரங்களில் மாதம் ₹2,160-ம் கூடுதல் தொகையாகப் பெறுகின்றனர்.
முக்கிய நகரங்களில் என்ன பலன் கிடைக்கும்?
ஜூலை 2026 முதல் அகவிலைப்படி 64% ஆக உயர்ந்தால், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற 'X' வகை நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கூடுதல் போக்குவரத்துப் படி மாதம் ₹4,320-லிருந்து ₹4,680-ஆக அதிகரிக்கக்கூடும்.
இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ₹360 கிடைக்கும். ஆண்டு அடிப்படையில் பார்த்தால், இந்தக் கூடுதல் தொகை ₹4,320-ஐ எட்டக்கூடும்.
சிறிய நகரங்களில் என்ன பலன்கள் கிடைக்கும்?
'Y' மற்றும் 'Z' வகை நகரங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களும் இந்த உயர்வால் பயனடைவார்கள். இப்பகுதிகளில், போக்குவரத்துப் படித் தொகை மாதம் ₹2,160-லிருந்து ₹2,340-ஆக உயர வாய்ப்புள்ளது. இதனால் மாதம் கூடுதலாக ₹180 வருமானம் கிடைக்கும். ஓராண்டு காலத்தில், இந்தப் பலன் மொத்தம் ₹2,160-ஆக அமையலாம்.
TA அதிகரிப்பு (மதிப்பீடு) சுருக்கமாக...
| 'X' வகை நகரங்கள் | 'Y' மற்றும் 'Z' வகை நகரங்கள் | |
| தற்போதைய TA | ₹4,320 | ₹2,160 |
| புதிய TA | ₹4,680 | ₹2,340 |
| மாத உயர்வு | ₹360 | ₹180 |
| ஆண்டு உயர்வு | ₹4,320 | ₹2,160 |
போக்குவரத்துப்படிக்கான அடிப்படை விகிதங்கள் என்ன?
7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியரின் ஊதிய நிலையைப் பொறுத்து போக்குவரத்துப்படிக்கான அடிப்படை விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஊதிய நிலை 14 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள ஊழியர்கள், அரசு அதிகாரப்பூர்வ கார் வசதியைப் பெறத் தகுதியுடையவர்களாக இருந்தும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு செய்தால், அவர்களுக்கு மாதம் ₹15,750 என்ற நிலையான போக்குவரத்துப் படி வழங்கப்படுகிறது. அதேவேளையில், மாற்றுத்திறனாளி ஊழியர்கள், தங்கள் ஊதிய நிலை மற்றும் நகர வகைப்பாட்டின் அடிப்படையில், சாதாரண ஊழியர்களை விட இருமடங்கு போக்குவரத்துப் படியைப் பெறுகின்றனர்.
காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். அகவிலைப்படி உயர்வு குறித்த துல்லியமான அளவு, அரசின் இறுதி உத்தரவுக்குப் பின்னரே தெரியவரும். இருப்பினும், அகவிலைப்படியில் (DA) 4 சதவீத உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படியில் மட்டுமல்லாமல், போக்குவரத்துப்படியிலும் கூடுதல் பலன்களைப் பெறுவார்கள்.
இந்த நிலையில், 2026 ஜூலையில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு வருவாய் உயர்வை அளிக்கும் ஒரு முக்கிய செய்தியாக அமையக்கூடும்.