SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

EPFO-வின் 74வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ரூ. 1,000 வரையிலான செயல்படாத பிஎஃப் கணக்குகளுக்கு தானியங்கி செட்டில்மென்ட் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பிஎஃப் சேவைகளை அணுகும் புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Written By R Balaji
Published: Nov 01, 2026, 04:25 PM IST | Updated: Nov 01, 2026, 04:29 PM IST
Join

பழைய PF கணக்கில் குறைந்த தொகை அப்படியே இருக்கிறதா? இனி அதற்காக தனியாக கோரிக்கை அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். அதேபோல், PF தொடர்பான சேவைகளை பெற அலுவலகத்துக்கோ இணையதளத்துக்கோ செல்லாமல் Whatsapp மூலமாகவே அணுகும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனது 74வது நிறுவன தினத்தை முன்னிட்டு இந்த இரண்டு முக்கிய முயற்சிகளை அறிவித்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நவம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதிகள் யாருக்கு பயனளிக்கும்? பழைய PF கணக்கில் உள்ள பணம் தானாகவே கிடைக்குமா? முழு விவரங்களை பார்க்கலாம்.

EPFO 74வது நிறுவன தினம்: வெளியான அறிவிப்பு?

இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பை நிர்வகிக்கும் அமைப்புடன் EPFO ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும், நிறுவனத்தின் பங்களிப்பும் PF கணக்கில் மாதந்தோறும் சேர்க்கப்படுகின்றன. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்புக்கு உதவுகிறது.

இந்த நிலையில், EPFO தனது 74வது நிறுவன தினத்தை நவம்பர் 1 அன்று டெல்லியில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரூ. 1000 அல்லது அதற்கும் குறைவான இருப்புத்தொகை கொண்ட தகுதியான செயல்படாத PF கணக்குகளை தானாக செட்டில் செய்வது.

EPFO சேவைகளை Whatsapp மூலமாகவும் வழங்குவது.

பலர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறும்போது, பழைய PF கணக்கில் உள்ள தொகையை பெறாமலோ புதிய கணக்குக்கு மாற்றாமலோ விட்டுவிடுகின்றனர். இதனால் சில கணக்குகளில் சிறிய அளவிலான தொகைகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன.

உதாரணமாக, ஒருவரின் பழைய PF கணக்கில் ரூ. 500, ரூ. 800 அல்லது ரூ. 1000 இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த கணக்கு செயல்படாமல் இருந்தாலும், அதில் உள்ள தொகையை பெற அவர் தனியாக கோரிக்கை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனை எளிமைப்படுத்தும் வகையில், ரூ. 1000 அல்லது அதற்கும் குறைவான இருப்புத்தொகை கொண்ட தகுதியான செயல்படாத PF கணக்குகளை தானாகவே செட்டில் செய்யும் முயற்சியை EPFO அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் தகுதி பெறும் சந்தாதாரர்கள் தனியாக கோரிக்கை அளிக்க வேண்டிய நடைமுறையை தவிர்க்க முடியும். இருப்பினும் அனைத்து செயல்படாத கணக்குகளுக்கும் இந்த வசதி பொருந்தாது. குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

யாருடைய PF கணக்கு செயல்படாத கணக்காக கருதப்படும்?

PF கணக்கில் நீண்ட காலமாக பங்களிப்பு வரவில்லை என்பதற்காக மட்டும் அந்த கண்க்கு தானாகவே செயல்படாத கணக்காக கருதப்படாது. இதற்கென EPF விதிகளில் குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளன.

2026 மார்ச் மாதத்தில் நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில், 55 வயதை அடைந்த பிறகு அல்லது ஓய்வுபெற்ற பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பங்களிப்பு வராத சில கணக்குகள் செயல்படாத கணக்குகளாக கருதப்படும் என விளக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ. 1000 அல்லது அதற்கும் குறைவான தொகை உள்ள இத்தகைய தகுதியான கணக்குகளுக்கு தானியங்கி செட்டில்மென்ட் முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டத்தில் சுமார் 1.33 லட்சம் கணக்குகளில் உள்ள ரூ. 5.68 கோடி தொகையை செட்டில் செய்யத் திட்டமிடப்பட்டது.

இந்த தொகையை உறுப்பினர்களின் ஆதார் இணைக்கப்பட்டு EPFOவில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டமும் குறிப்பிடப்பட்டது.

Whatsapp மூலமாகவே EPFO சேவைகள்

EPFO அறிவித்துள்ள மற்றொரு முக்கிய வசதி Whatsapp சேவையாகும். பொதுவாக PF தொடர்பான விவரங்களை அறியவும் சேவைகளை பெறவும் EPFO இணையதளம் அல்லது அலுவலகத்தை அணுக வேண்டியிருக்கும்.

இனி WhatsApp மூலமாகவும் EPFO சேவைகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்களது மொபைல் போனிலேயே EPFO சேவைகளை எளிதாக அணுக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், WhatsApp மூலம் என்னென்ன சேவைகளை பெற முடியும்? PF இருப்புத்தொகையை சரிபார்க்க முடியுமா? புகார் அளிக்க முடியுமா? கோரிக்கையின் நிலையை அறிய முடியுமா? என்பது போன்ற விவரங்கள் இதுவரை முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

எனவே, WhatsApp சேவையின் முழுமையான பட்டியல் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த EPFO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

பவிஷ்ய நிதி விருதுகள் 2026: யாருக்கு வழங்கப்படுகிறது?

EPFO நிறுவன தின நிகழ்ச்சியில் புதிய சேவைகள் மட்டுமின்றி, சிறப்பாக செயல்பட்ட அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களையும் அங்கீகரிக்கும் வகையில் பவிஷ்ய நிதி விருதுகள் 2026 வழங்கப்பட்டன.

EPFO-வின் மண்டல அலுவலகங்கள், மண்டல அளவிலான அலுவலகங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி மத்திய அமைச்சர் இந்த விருதுகளை வழங்கினார்.

மேலும், EPFO மேற்கொண்டுள்ள பணிகள், நிறுவனத்தின் கற்றல் அனுபவங்கள், சட்ட விழிப்புணர்வு மற்றும் மக்கள் நல நிர்வாகம் தொடர்பான வெளியீடுகளும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

PF சந்தாதாரர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

இந்த அறிவிப்புகள் PF சந்தாதாரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், புதிய வசதிகளின் முழுமையான நடைமுறைகள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

பழைய PF கணக்கில் ரூ. 1,000 அல்லது அதற்கும் குறைவான தொகை இருந்தால், அது தகுதியான செயல்படாத கணக்கா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் இணைப்பு சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நல்லது.

WhatsApp சேவைக்கான அதிகாரப்பூர்வ எண் மற்றும் பயன்பாட்டு வழிமுறைகளை EPFO அறிவித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

தானியங்கி செட்டில்மென்ட் வசதி குறித்த முழுமையான விதிமுறைகள் வெளியாகும் வரை தனியாகப் பணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES