பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்யும் நடைமுறைகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவா பிரிவு மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறைத் திருத்தத்தை வெளியிட்டுள்ளது. இனி பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பும் அதிகாரப்பூர்வ செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2026 ஏப்ரல் 15 அன்று அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் அதிகாரப்பூர்வ அலுவலக குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த 29.05.2020 அன்று வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில், பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விதிகளின்படி, பெயர் மாற்றம் செய்ததற்கான சான்றாக இரண்டு உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியான விளம்பர நறுக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் அரசிதழ் அறிவிப்பு மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசின் கெசட் மூலம் பெயர் மாற்றம் செய்த பல விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் விதிகளில் பெயர் விடுபட்டிருந்த காரணத்தால் பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிக்கல்களை எதிர்கொண்டன. மத்திய அரசின் அரசிதழ் விதிகளில் குறிப்பிடப்படாமல் போனது ஒரு தட்டச்சு/செயல்முறை விடுபடுதல் என்பதை அரசு தற்போது முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் அரசிதழ் ஏற்றுக்கொள்ளப்படாததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் கெசட் அறிவிப்பையும் பெயர் மாற்றத்திற்கு உகந்த ஆவணமாகச் சேர்ப்பது குறித்து தகுதியான அதிகாரம் கொண்ட அதிகாரிகள் உடனடியாகப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 1 அன்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்தது. அதன்படி, முந்தைய 2020-ஆம் ஆண்டு உத்தரவில் இருந்த குறைபாட்டை நீக்கி, புதிய திருத்தத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம், பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் ஒருவர் இனி கீழ்க்கண்ட மூன்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம்:
பெயர் மாற்றம் குறித்து இரண்டு உள்ளூர் நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களின் துண்டுகள்,
சம்பந்தப்பட்ட மாநில அரசின் அரசிதழில் வெளியான அறிவிப்பு,
மத்திய அரசின் அரசிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,
மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வாழும் இந்தியக் குடிமக்கள் பலர், தங்கள் பெயர் மாற்ற நடைமுறைகளை மத்திய அரசின் அரசிதழ் மூலமாகவே அதிகாரப்பூர்வமாகச் செய்து வருகின்றனர். ஆனால் பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் "மாநில அரசிதழ்" என்று மட்டுமே இருந்ததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அல்லது கூடுதல் ஆவணங்களைக் கேட்டு அலைக்கழிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது.
தற்போது மத்திய அரசின் அரசிதழும் வெளிப்படையாக இணைக்கப்பட்டுவிட்டதால், விண்ணப்பதாரர்கள் எவ்விதத் தடையுமின்றி தங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து விரைவாகப் பெயர் மாற்றத்தைப் பெற முடியும்.
இந்த புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளைத் தவிர்த்து, 29.05.2020 தேதியிட்ட முந்தைய உத்தரவில் உள்ள மற்ற அனைத்து விதிகளும் எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டுதலைத் தவறாமல் பின்பற்றி நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளும் இதனைச் சீராக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சோமிகா ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.