RBI Repo Rate Hike: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று அடிப்படை வட்டி விகிதமான 'ரெப்போ விகிதத்தை' (Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் (basis points) உயர்த்தி, அதனை 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து கார் கடன், வீட்டுக் கடன் போன்ற கடன்களின் வட்டி விகிதங்கள், EMI ஆகியவற்றில் வரக்கூடிய உயர்வு மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC) உறுப்பினர்கள் இந்த வட்டி விகித உயர்வுக்கு ஒருமனதாக ஆதரவு அளித்தனர். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெப்போ விகித உயர்வு அறிவிப்பை வெளியிட்டார்.
ரெப்போ விகித உயர்வால் கடன் பெறுவதற்கான செலவு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்காகும் செலவு அதிகரித்தால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி அளவை அதிகரிக்கும். இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட 'வெளிப்புற அளவுகோல் கடன் விகிதத்துடன்' (EBLR) மாறும் வட்டி விகிதத்திலான (floating-rate) வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், இக்கடன்களுக்கான செலவு உடனடியாக அதிகரிக்கிறது. இது மாதாந்திர தவணை (EMI) அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவை நேரடியாகப் பாதிக்கிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால் அதிகரித்த EMI சுமையைத் தவிர்ப்பதற்கான வழிகளை இங்கே காணலாம்.
| அம்சம் | விவரம் |
| EMI | EMI தொகையைச் சற்று உயர்த்தலாம் |
| Pre-payment | முன்கூட்டியே கடன் தொகையைச் செலுத்தலாம் |
| Over Draft | 'ஹோம் சேவர்' (ஓவர் டிராஃப்ட்) வசதியைப் பயன்படுத்தலாம் |
| Loan Spread | வீட்டுக் கடன் மாற்றம் பற்றி வங்கியுடன் பேசலாம் |
மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது, வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளரின் மாதாந்திர EMI தொகையை மாற்றாமல் வைத்துக்கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கின்றன. இது கடன் வாங்கியவருக்கு பெரும்பாலும் அதிக செலவு பிடிக்கும் தேர்வாக அமைகிறது. இப்படிப்பட்ட நேரங்களில்,
கடன் பெற்றவர், மொத்தமாக பணம் கிடைக்கும்போதெல்லாம், கடனின் அசல் தொகையை சிறிது சிறிதாக அடைப்பது வட்டித் தொகையை மிச்சமாக்க உதவும்.
உங்கள் அவசரக்கால நிதியையோ அல்லது பணப்புழக்கத்தையோ பாதிக்காமல் வட்டியைச் சேமிக்க விரும்பினால், உங்கள் தற்போதைய கடனை 'வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட்' (home loan overdraft) கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
வங்கியுடன் கடன் 'ஸ்பிரெட்' பற்றிய பேச்சுவார்த்தை மூலம் நன்மை பெறலாம்.
வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ள காலத்திலும், வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான EMI-ஐ செலுத்திக்கொண்டிருக்கும் நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகள் மூலம் அதிக பண விரயத்தை தவிர்க்க முயற்சிக்கலாம்.